Published : 06,Dec 2022 07:20 PM

ட்ரோன் மூலம் விவசாயிகள் அதிக வருமானம் பார்க்கலாமாம்... எப்படி தெரியுமா?

India-will-emerge-as-the-center-of-the-world-in-drone-technology--Union-Minister-Anurag

"ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் வகையில் 2023-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 1 லட்சம் ட்ரோன் பைலைட்டுகளை தயார்ப்படுத்த வேண்டும்" என அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் வழியாக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் வழங்கபடும் ட்ரோன் திறன் மற்றும் பயிற்சி வகுப்புகளை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று துவங்கி வைத்தார்.

சென்னை தாளம்புரில் உள்ள தனியார் கல்லூரியில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்தியாவின் மிக பெரிய ட்ரோன் உற்பத்தி மையத்தை துவங்கி வைத்தார், பின்னர் ட்ரோன் பயன்பாடுகள் குறித்தும் , ட்ரோன் குறித்த திறன் மற்றும் பயிற்சிகளை ஆன்லைன் மூலம் துவங்கி வைத்தார். முன்னதாக 30 வகையான ட்ரோன்கள் மைதானத்தில் பரக்கவிடப்பட்டன. அதேபோல இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு கல்லூரிகளுக்கு சென்று கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் மூலம் ட்ரோன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கம் அளிக்கும் திட்டத்தை அமைச்சர் துவங்கி வைத்தார்.

image

பின்னர் மேடையில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் ட்ரோன் எவ்வளவு உதவியாக இருந்தது என நாம் பார்த்தோம். ட்ரோன்கள் தற்போது வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகப்பெரிய அளவில் அவை உதவியாக உள்ளதால் பிரதமர் அரசு திட்டங்களில் அவற்றை சேர்த்துள்ளார்.

2014ஆம் ஆண்டு MAKE IN INDIA திட்டம் குறித்து பிரதமர் பேசும்போது இது சாத்தியமா என கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இன்று 2022ஆம் ஆண்டு இந்தியாவின் இளைஞர்கள் அவற்றை சாத்தியபடுத்திவருகின்றனர்.

வேளாண்துறையில் தொடர்ச்சியாக அறிவியல் வளர்ச்சிகளை கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹிமாச்சல்பிரதேசம் போன்ற மலை உள்ள பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்துவது மிகவும் உதவியாக உள்ளது. இருப்பினும் ட்ரோன் மூலம் அதிவேகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை வெளியே கொண்டு செல்ல கண்டுபிடிப்புகள் வர வேண்டும். விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக அதிகரிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

image

ட்ரோன் பைலைட்டுகள் வேலைவாய்ப்பின் மூலம் நல்ல ஊதியம் ஈட்டும் வாய்ப்பு இருப்பதால், இவர்களது பணிமூலம் விவசாயத்துறையில் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கோடி அளவுக்கு 4 மடங்கு சேமிக்க முடியும். சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுப்பதற்கும் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படும். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் நிலையில், இதன் மூலம் திறன் வாய்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்வதையும் தடுக்க முடியும். இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதுடன், நாட்டையும் முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “அடுத்த 25 ஆண்டுகளில் இளைஞர்கள் தங்களது தொழிலை தேர்ந்தெடுத்து நாட்டை முன்னேற்ற உதவ வேண்டும். ட்ரோன் தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்கிறது. இந்தியாவை உலகின் ட்ரோன் மையமாக உருவாக்கும் மத்திய அரசின் முயற்சியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். நாட்டைப் பாதுகாக்கும் வீரர்கள், நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளுடன் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான விஞ்ஞானமும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

image

அடல்பிகாரி வாஜ்பாய் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தகவல் தொழில்நுட்ப முன்முயற்சியால் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தற்போதும் திறமைவாய்ந்த இளைஞர்களின் சக்தி இந்தியாவில் உள்ளது. இதன் மூலம் இந்தியா உலகிலேயே பெரும் சக்தியாக உருவெடுக்க முடியும். தற்போது நாட்டில் 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்-கள் ட்ரோன் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது, இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரித்து லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்காக உருவாக்கும்.

image

பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து நவீன ட்ரோன் தொழில்நுட்பச் சூழல், அமிர்த காலத்தில் தன்னிறைவு கொண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் என்றும், இளைஞர்களுக்கு இந்தத் துறையில் திறன் பயிற்சி அளிப்பதில் முதலீடு செய்ய மத்திய அரசு தொடர்ந்து முனைப்புக் காட்டி வருவதாகக் கூறிய அமைச்சர், உலகிலேயே ட்ரோன் தொழில்நுட்ப மையமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது” என்று தெரிவித்தார்.

பின்னர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த கருடாஸ்பேஸ் நிறுவனத்தின் CEO அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ்:

“கொரோனா காலகட்டத்திற்கு பல்வேறு இடங்களில் தற்போது ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற 2024ஆம் ஆண்டில் ட்ரோன் தொழில்நுட்பம் சார்ந்த வருமானமே 4 பில்லியன் ரூபாயை தொட உள்ளது. எனவே இந்தியாவில் உள்ள பலர் இதனை படிக்கும் வகையிலும்,ட்ரோன் இயக்கவும் பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் துவங்கி வைத்துள்ளார்.

ட்ரோன் மூலம் விவசாயிகள் எளிமையாக அதிக அளவில் வருமானம் பெற வாய்ப்புள்ளது. நேரடியாக அவர்களால் ட்ரோன் வாங்க முடியாமல் சென்றாலும் ஓலா ஊபர் போல ட்ரோன் வைத்துள்ள நபர்களை அழைத்தால், அவர்கள் ஒரு ஏக்கருக்கு 400 ரூபாய் பெற்று மருந்து தெளிப்பார்கள், ஒரு நாளில் 20 முதல் 25 ஏக்கர் வரை ட்ரோன் மூலம் குறைந்த தண்ணீர் மற்றும் மருந்தை பயன்படுத்தி மருந்தை தெளிக்கலாம்” என தெரிவித்தார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்