Published : 06,Dec 2022 11:24 AM

மீண்டும் மீண்டும் மோசமான தோல்வி - இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள 5 முக்கிய பிரச்னைகள்!

5-major-problems-in-the-Indian-cricket-team

ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை என முக்கிய தொடர்களில் சொதப்பி தோல்வியை சந்தித்த இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய அணியின் இந்த மோசமான செயல்பாடு கிரிக்கெட் ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டியான வங்கதேசத்திடம் இப்படி சொதப்பியது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பிரச்சினைதான் என்ன..?

1. நிலையான ஆட்டம் எங்கே?

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமின்றி பெரும்பாலான போட்டிகளில் நிலையாக ஆடி ரன்களைச் சேர்க்கும் திறன் கொண்ட வீரர் என சமீபகாலமாக இந்திய அணியில் யாரும் இல்லை. ஒரு குழுவாக போராடி வென்ற ஆட்டத்தை பார்த்து வெகு காலமாகி விட்டது. ஒட்டுமொத்த அணியில் ஏதேனும் ஒரு வீரரோ அல்லது இருவரோ மட்டுமே குறிப்பிடும்படியான ரன்களை எடுக்கின்றனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறுகின்றனர். ஒரு போட்டியில் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்க முடியாதுதான். அதற்காக ஒட்டுமொத்த அணியில் ஓரிருவர் மட்டும் ஆட்டத்தை தூக்கி நிறுத்துவது என்பது பலனளிக்காது என்பதை பலமுறை பார்த்து விட்டோம். கிரிக்கெட்டில் தனித்த செயல்பாட்டை விட குழுவாக செயல்பட்டால்தான் வெற்றி வசப்படும்.

அதேபோல் இந்திய அணியில் தொடக்க பேட்டிங் வரிசை சொதப்பலாக ஆடி வருவது கவலை தரும் அம்சமாகும். இதனால் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கூடுகிறது. அதேபோல் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பது என்பது இந்திய அணியில் இல்லாத ஒன்றாக உள்ளது. குறைந்த பட்சம் 50 ரன்களுக்கு மேல் கூட்டணியாக ரன் சேர்த்தால்தான் அது மனதளவில் நம்பிக்கை அளிக்கும். அடுத்து வரும் பேட்ஸ்மேனுக்கும் அழுத்தம் இல்லாமல் ஆட உதவி செய்யும்.

image

2. பலவீனமான பவுலிங் யூனிட்

இந்திய அணியை பொறுத்தவரை பந்துவீச்சு தலையாய பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, சமீபகாலமாக இந்திய அணியின் பந்துவீச்சில் எந்தவித ஆக்ரோஷமும் இல்லை. எதிரணியை அச்சுறுத்தும் விதமான வேகப்பந்து வீச்சு யூனிட் என்பது இந்திய அணிக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெயில் எண்டர்களிடம் தோல்வியை சந்தித்கும் அளவுக்கு டெத் ஓவர்களில் படு மோசமாக பந்து வீசியிருந்தனர் இந்திய பவுலர்கள். ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோரை மட்டுமே இந்திய அணி அதிகமாக சார்ந்திருக்கிறது. உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இவர்கள் மூவரை மட்டுமே சார்ந்திருப்பது நல்லதல்ல. இவர்களில் ஒருவர் இல்லையென்றாலும் இந்திய அணி திணறுகிறது. எனவே பந்து வீச்சில் இருக்கும் பலவீனத்தை சரிசெய்ய புதிய யுக்தியுடன் களமாடுவது மிகவும் அவசியம்.

image

3. தொடரும் பீல்டிங் சொதப்பல்கள்

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கேஎல் ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. கேஎல் ராகுல் இந்த தவறை அடிக்கடி செய்பவர் கிடையாது என்றாலும் ஒவ்வொரு போட்டியிலும் யாரேனும் ஒருவர் இப்படி சொதப்பி வந்தால் என்னதான் செய்வது? இந்திய அணியில் பீல்டிங்கை பொருத்தவரை  இன்னும் நிறைய பயிற்சிகளை எடுக்க வேண்டியது உள்ளது. உலகத் தரம்வாய்ந்த அணியாக திகழ்ந்துவரும் இந்தியா ஓர் கத்துக்குட்டி அணியைப் போல் பீல்டிங்கில் சொதப்புவது நல்லதல்ல.   

image

4.அணி தேர்வில் நீடிக்கும் குழப்பம்

இந்திய அணி வீரர்கள் தேர்வு விஷயத்தில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  ''இந்திய அணியில் தற்போது அதிக மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. வீரர்களுக்கு ஓய்வு என்ற பெயரில் பிசிசிஐ எடுக்கும் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை அளிக்கிறது. நீங்கள் அணியை இப்படி மாற்றிக் கொண்டே இருந்தால் உங்களால் நிலையான அணியை உருவாக்க முடியாது. சரியான அணியை கட்டமைக்க அதிக காலம் தேவைப்படும்.

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கிறது. இதனால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் அனைத்து போட்டியிலுமே விளையாடும் வகையில் அணியை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் ஒரே அணியை வைத்து தொடர்ந்து போட்டிகளில் களமிறங்கினால் தான் அணியில் ஒரு பிணைப்பு ஏற்படும்'' என்று கவாஸ்கர் கூறினார்.

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கேஎல் ராகுல் திடீரென்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார். நீண்ட நாட்கள் கழித்து விக்கெட் கீப்பிங் செய்ததால் முக்கிய நேரத்தில் அவர் தவற விட்ட கேட்ச் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே விக்கெட் கீப்பர் பணியை பொறுத்தமட்டில் இப்படி தடாலடியாக மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

image

5.கேப்டன்சியில் தடுமாற்றம்

இந்திய அணியின் தோல்வியினால் கேப்டன் ரோகித் சர்மாவை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துக்கொண்டே வருகின்றன. குறிப்பாக கேப்டனாக, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அதிரடி காட்ட வேண்டிய ரோகித் சர்மா தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில் 'ஹிட்மேன்' என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு எதிரணிகளைப் பந்தாடிய அவர் சமீப காலங்களில் குறிப்பாக கேப்டன்ஷிப் பதவியேற்ற பின் பேட்டிங்கில் ரன்களை குவிக்க திணறுகிறார்.

அத்துடன் ரோகித்துக்கு ஏற்கனவே 33 வயதை கடந்து விட்ட காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு பதில் 2022 ஐபிஎல் கோப்பையை வென்று துடிதுடிப்பான ஆல்-ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியாவை குறைந்தபட்சம் டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.