Published : 05,Dec 2022 08:12 AM
இரக்கமின்றி கொல்லப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் - திருப்பூரில் அதிர்ச்சி: நடந்தது என்ன?

உடுமலை அருகே புக்குளத்தில் மனநலம் பாதிக்கபட்ட பெண்ணை கல்லால் அடித்து கொன்ற நபர் 48 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யபட்ட குற்றவாளி மீது மேலும் பல குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் சில வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் கடந்த சில வருடங்களாக சிறிது மனநலம் பாதிக்கபட்ட நிலையில் இருந்தார் என சொல்லப்படுகிறது. அங்கேயே சாலையோரமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இரு தினங்களுக்கு முன் புக்குளம் பேருந்து நிறுத்ததில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்துகிடந்தார். அவர் இறப்பு குறித்து விசாரணை செய்துவந்த காவல்துறையினர், சி.சி.டி.வி கேமிராக்களின் மூலம் ஆய்வு செய்துவந்தனர். அப்போது ஏரிப்பாளையம் பகுதியை சார்ந்த ஆரோக்கியராஜ் என்பவர் அப்பெண்ணை அடித்துக்கொன்றது தெரியவரவே, அவரை உடனடியாக கண்டறிந்து கைது செய்தனர்.
ஆரோக்கியராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கொலையாளி மீது இதற்கு முன்னதாகவே பல குற்ற செயல்களில் ஈடுப்பட்டு வந்ததும், பல்வேறு குற்ற வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து ஆரோக்கியராஜை நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.