Published : 04,Dec 2022 01:01 PM

'ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது சாபக்கேடு' – துரை வைகோ

Online-Rummy-Prohibition-Act-Governor-s-no-approval-is-a-shame-Durai-Vaiko

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது சாபக்கேடு என துரை வைகோ குற்றஞ்சாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் நினைவாக சமீபத்தில் திறக்கப்பட்ட நினைவரங்கத்தை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ இன்று பார்வையிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... கி.ரா.விற்கு மணிமண்டபம் அமைத்தற்கு தமிழக முதல்வருக்கும், அதற்கு பாடுபட்ட கனிமொழி எம்.பி.க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். திமுக மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பேசியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆர்.எஸ்.பாரதி பேசியது பற்றி எனக்கு தெரியாது. அதை பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

image

திமுக கூட்டணி தொடர்பாக முதல்வரோ, திமுக மூத்த நிர்வாகிகளோ கருத்து தெரிவிக்கவில்லை. மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி தொடரும் என்று தான் முதல்வரும், திமுக மூத்த நிர்வாகிகளும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்பது தான் எங்களுடைய கருத்து. இந்த கூட்டணி உடையட்டும் என்று நினைக்கும் மதவாத சக்திகளுக்கு தீனி போடும் வகையில் இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. அது வதந்திகளாகவே இருக்கட்டும்.

ஒரு கூட்டணியில் இருக்கும் போது எல்லா விஷயத்திலும் ஒன்றுபட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எல்லாத்திலும் ஒன்றுபட்டால் பல இயக்கங்கள் வேண்டாம். ஒரே இயக்கமாக இருந்து விடலாம். பொதுவுடைமை இயக்கங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், கூட்டணியை விட்டு வெளியே சென்று விடுவார்கள் என்றோ, கூட்டணிக்கு இடையூறு கொடுப்பார்கள் என்றோ சொல்ல முடியாது.

ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு 17 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 30-க்கு மேல் தாண்டி உள்ளது. ஆன்லைன் அவசர சட்டம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட பின்னரும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவர் கேட்ட கேள்விகளுக்கும் சட்டத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். இருந்த போதிலும் தற்போது வரை அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது ஒரு பெரிய சாபக்கேடு என்று தான் சொல்லுவேன்.

image

தமிழக ஆளுநர் தமிழக மக்களுக்காக செயல்பட வேண்டும். 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. ஆளுநர், தனது கடமையை முதலில் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு, தனிப்பட்ட ஒரு இயக்கத்தின் சார்பாக, ஒரு சித்தாந்தத்தின் சார்பாக, தொடர்ந்து குரல் கொடுப்பதும், பணி புரிவதும் ஆரோக்கியமானது அல்ல. ஜனநாயக நாட்டில் இப்படி செயல்படுவது, மிகப்பெரிய ஜனநாயக கேடு என்று தான் சொல்லுவேன். ஆளுநர் காலதாமதம் செய்வதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்ன சொல்கிறார்.

நாளொரு பொழுதும் தமிழக அரசு மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவதூறுகளை தான் சொல்லி கொண்டிருக்கிறார். நியாயமான குற்றச்சாட்டுகளை சொல்வதில் தவறு கிடையாது. அண்ணாமலை நன்கு படித்தவர். பொறுப்புள்ள அரசியல் கட்சி தலைவராக செயல்பட வேண்டும். தமிழகத்தில் எந்த ஊரில் எந்த பிரச்னை என்றாலும் முதலில் குரல் கொடுப்பது மதிமுக தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மீனவர்கள் பிரச்னை, இந்தி ஆதிக்க எதிர்ப்பு இவற்றை கண்டித்து மதிமுக போராட்டம் நடத்தி உள்ளது.

விவசாயிகள் பிரச்னை, மக்கள் வாழ்வாதார பிரச்னை என எல்லாவற்றுக்கும் என்னால் முடிந்தவற்றை செய்து வருகிறேன். நான் ஒரு எம்.பி-யோ, எம்.எல்.ஏ-வோ கிடையாது. எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி உதவி செய்து வருகிறேன் என்றார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்