Published : 02,Dec 2022 09:15 PM

பொல்லார்ட் வழியில் எண்ட் கார்டு போட்ட பிராவோ.. மும்பை பாணியில் கமா போட்ட சிஎஸ்கே!

Dwayne-Bravo-announces-retirement-from-IPL-reveals-new-role-with-Chennai-Super-Kings-from-2023-season

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான டூவைன் பிராவோ ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அவரை பௌலிங் பயிற்சியாளராக நியமித்து சென்னை அணி தக்க வைத்துள்ளது.

2023-ம் ஆண்டுக்கான 16-வது சீசன் ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. இதற்கு முன்பாக 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் 15-ம் தேதி மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இதனை முன்னிட்டு பல அணிகளும் தங்களது வீரர்களை விடுவித்தன. இதில் சென்னை அணி, நட்சத்திர வீரரான டூவைன் பிராவோ, ராபின் உத்தப்பா (ஓய்வு), ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன், என். ஜெகதீசன், சி. ஹரி நிஷாந்த், கே. பகத் வர்மா, கே.எம். ஆசிப் ஆகிய 8 வீரர்களை விடுவித்தது.

சென்னை அணியில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நட்சத்திர வீரராக செயல்பட்டு வரும் பிராவோ விடுவிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தாலும், 39 வயதான அவரால் இதற்கு மேல் அணியில் தொடர முடியாது என்பது நிதர்சனமான உண்மையாக இருந்தது. ஏற்கனவே அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலும் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், சென்னை அணி விடுவித்தாலும், ஐபிஎல் 16-வது சீசனுக்கான மினி ஏலத்தில், பிராவோ தனது பெயரை பதிவு செய்வார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், அதனையெல்லாம் செய்யாமல் பிராவோ, ஐபிஎல் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலிங் பயிற்சியாளராக அந்த அணி நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மும்பை பாணியில் சிஎஸ்கே!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், மும்பை அணியின் ஆல் ரவுண்டருமான 35 வயது கைரன் பொல்லார்ட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தநிலையில், உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்டை அந்த அணி நியமித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. தற்போது அதே ஃபார்முலாவை கையிலெடுத்துள்ளது சென்னை அணியும்.

இது புதிய பயணம் - பிராவோ

வருகிற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் தற்போதைய பௌலிங் பயிற்சியாளரான எல்.பாலாஜி, சொந்த காரணங்களால் விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிராவோ உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளதாவது, “நான் இந்தப் புதிய பயணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன், ஏனென்றால் நான் விளையாடும் நாட்கள் முடிந்தப் பிறகும் நான் புதிதாக செய்யப் போவதைப் பார்க்கப் போகிறேன். பந்துவீச்சாளர்களுடன் பணிபுரிவதை ரசிக்கிறேன், உண்மையில் இது எனக்கு உற்சாகமான கதாபாத்திரம்.

வீரர்கள் முதல் பயிற்சியாளர் வரை, அதிகம் சரிசெய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் நான் விளையாடும் போது, எப்போதும் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை விட ஒரு படி மேலே எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களையும் யோசனைகளையும் கொண்டு வர முயற்சிப்பேன். ஒரே வித்தியாசம் என்னவென்றால், நான் இனி மிட்-ஆன் அல்லது மிட்-ஆஃப் நிற்க மாட்டேன். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் ஐபிஎல் வரலாற்றில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

image

சிஎஸ்கே வெளியிட்ட அறிக்கை

இதுகுறித்து சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடரில் டூவைன் பிராவோ சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சூப்பர் கிங்ஸ் குடும்பத்தில் முக்கியமான உறுப்பினராக இருந்து வருகிறார், மேலும் அதனை அவர் தொடர்வதை கண்டு மகிழ்ச்சியடைகிறோம். பிராவோவின் மிகப்பெரிய அனுபவம், எங்கள் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு மகத்தான ஒன்றாக இருக்கும். அவரது வழிகாட்டுதலின் கீழ் எங்கள் பந்துவீச்சு குழு சிறப்பாக செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்!

ஐபிஎல் வரலாற்றில் 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக பிராவோ விளங்கி வருகிறார். மேலும் 130 ஸ்டிரைக் ரேட்டுடன் 1560 ரன்கள் எடுத்துள்ளார். 2011, 2018, 2021 ஆகிய சீசன்களில் சென்னை அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பிராவோ. 2014-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியை வெல்ல முக்கிய பங்காற்றியவர் பிராவோ. 2013 மற்றும் 2015 சீசன்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப், இரண்டு முறை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் பிராவோ தக்கவைத்துள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்