Published : 02,Dec 2022 07:06 PM
விஜய்யின் சினிமா கேரியரில் முக்கிய நாளில் ‘வாரிசு’ இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்!

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, தற்போதிலிருந்து புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ள நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் யூட்யூப்பில் வெளியாகி 77 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஜய் மற்றும் மானசி இந்தப் பாடலை பாடியுள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், வருகிற 4-ம் தேதி மாலை 4 மணிக்கு ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ’ வெளியாக உள்ளதாக, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து விஜய்யின் ரசிகர்கள் #TheeThalapathy என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய் கதாநாயகனாக ‘நாளையா தீர்ப்பு’ என்றப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடித்து வைத்தார். இந்தப் படம் 1992-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி தான் வெளியானது. விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்தப் பாடல் வெளியிடப்பட உள்ளது, அவரது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.