Published : 02,Dec 2022 07:36 AM

'தூக்கி அடிச்சிடுவாங்க பாத்துக்கோங்க' - கே.எல்.ராகுலை எச்சரித்த முன்னாள் இந்திய வீரர்

You-can-be-dropped-even-if-Ex-India-cricketer-fires-huge-warning-to-KL-Rahul-ahead-of-Bangladesh-series

டி20 உலகக் கோப்பையில் சொதப்பிய கேஎல் ராகுல், வங்கதேச தொடரிலாவது பழைய நிலைக்கு திரும்புவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டி20 தொடரில் இரண்டு போட்டிகள் மழை காரணமாக ரத்து ஆனது. ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றது. அதில் இந்தியா வெற்றி பெற்றது. ஆகையால் டி20 தொடரை கைப்பற்றி விட்டது. ஒருநாள் தொடரிலும் இதே போன்று நடந்தது. ஆனால் அந்த ஒரு போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

image

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்டு ஷிகர் தவான் தலைமையில் களம் இறங்கியது. அடுத்த ஆண்டு இந்தியாவில் அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் விதமாக நியூசிலாந்து தொடர் மூலம் பிசிசிஐ இந்திய அணியை கட்டமைக்கும் பணியை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த முடிவு இந்திய அணிக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து, இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 4ஆம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது சமி ஆகியோர் வங்கதேச தொடருக்கு திரும்பி இருக்கிறார்கள். இதில் முக்கியமாக, டி20 உலகக் கோப்பையில் சொதப்பிய கேஎல் ராகுல், வங்கதேச தொடரிலாவது பழைய நிலைக்கு திரும்புவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

image

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் மனிந்தர் சிங் கூறுகையில், ''ஜிம்பாப்வே தொடரில் இருந்தே கேஎல் ராகுல் படுதோல்வி அடைந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்திய தொடக்க வீரர் கேஎல் ராகுல் அச்சமின்றி ஒவ்வொரு போட்டியிலும் விளையாட வேண்டும். கேஎல் ராகுலில் மிகச்சிறந்த திறமையான வீரர். ஆனால் முதல் சில ஓவர்களில் பந்துகளை தேவையின்றி ஆடாமல் இருப்பது பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்திய அணியின் துணை கேப்டனாகவே இருந்தாலும், வரும் காலங்களில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்படலாம். இதனால் அச்சமில்லாமல் ஆட ராகுல் முன்வர வேண்டும்'' என்று அறிவுறுத்தியுள்ளார்.

தவற விடாதீர்: “இப்படியே போனால் டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவுதான்” - சூர்யகுமார் குறித்து ஜாஃபர் கவலை!