Published : 01,Dec 2022 10:36 PM

ஜல்லிக்கட்டு வழக்கில் நீதிபதிகளின் கேள்விகளும், தமிழக அரசின் நீண்ட, தெளிவான விளக்கமும்!

Policy-Decision-of-Tamil-Nadu-Govt-in-Jallikattu-and-Supreme-court-arugement

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விலங்குகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு தடைகோரிய வழக்கு 4வது நாள் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மிக நீண்ட, தெளிவான விளக்கங்களை முன்வைத்தார். நீதிபதிகள் எழுப்பிய ஒவ்வொரு கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் காத்திரமான பதில் அளிக்கப்பட்டது. அதன் முழுமையான விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நீதிபதிகளின் கேள்விகளும்.. தமிழக அரசின் வாதமும்;

ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து சட்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் நீதிமன்றம் வரம்பு கிடையாது என தமிழக அரசு வாதம் வைத்தது.

மேலும், "விளையாட்டு என்றாலே அதில் சில ஆபத்துகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அவை அனைத்திற்கும் தடை விதித்துவிட முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது இந்த விளையாட்டு. ஆனால் தற்போது காளைகள் ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்த தகுதி இல்லை என முந்தைய நாகராஜ் வழக்கில் கூறுவது எவ்வாறு ஏற்க முடியும்? காயம்பட்ட காளைகள், கொம்பு முறிந்த காளைகள் என உடற்தகுதி இல்லாத காளைகள் தான் தகுதி இல்லாதவை. மேலும் நாகராஜ் வழக்கின்போது பல்வேறு விதிகள் இல்லை. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் யாரும் வற்புறுத்தப்படுவதில்லை. அவர்களாகவே கலந்து கொள்கிறார்கள். எனவே, அதிலுள்ள ஆபத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுதான் விளையாடுகிறார்கள். இமயமலைக்கும் எவரெஸ்ட்டிற்கும் மலையேற்றத்திற்காக செல்கின்றார்கள். அப்படி நீங்கள் போனால் உயிரிழந்து போவீர்கள். எனவே போகாதீர்கள் என எந்த அரசாவது தடுக்க முடியுமா" என தமிழக அரசு கேள்வி எழுப்பியது.

"இது மாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; மனிதர்கள் கூட காயப்படுகிறார்கள், உயிரிழக்கிறார்கள். அதுவும் விசாரிக்கப்பட வேண்டியது" என பீட்டா உள்ளீட்டு அமைப்புகள் கூறுகின்றது என  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியபோது, 

"அப்படி என்றால் ரக்பி, கால்பந்து, குத்துச்சண்டை என பல விளையாட்டுகளிலும், பல்வேறு வேலைகளிலும் கூட மனிதர்கள் உயிரிழக்கிறார்கள். அதற்கு என்ன சொல்ல முடியும்?" என தமிழக அரசு வாதம் வைத்தது. 

image

தொடர்ந்து, "ஜல்லிக்கட்டு போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் காளைகளை துன்புறுத்துவதாக இருக்கிறது" என விலங்குகள் அமைப்புகள் குற்றம் சாட்டுகிறதே என  நீதிபதிகள் கேட்டபோது,

"அப்படி என்றால் திருமணங்களிலும் திருவிழாக்களிலும் கூட தான் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அங்கெல்லாம் கூட குதிரைகளும் யானைகளும் பயன்படுத்தப்பட்டு கொண்டுதானே இருக்கிறது" என தமிழக அரசு பதிலளித்தது.

”ஜல்லிக்கட்டு காளைகள் என்பது வெறும் விளையாட்டுக்காக மட்டுமல்லாமல் அதனுடைய நலனுக்காகவும் தான் வளர்க்கப்படுகிறது: ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாசார நிகழ்வை பொய்யையும் அவதூறையும் சொல்லி நிறுத்தம் செய்யக்கூடாது. உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை கண்காணிக்கிறது. போட்டிகள் நடக்கும் பொழுது முழுமையாக அதனை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படுகின்றது. மாவட்ட ஆட்சியர் கண்காணிக்கிறார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் களத்திலிருந்து ஆய்வு செய்கிறார். இவை அனைத்தும் நடந்தும் விதிமுறை மீறப்படுகிறது என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?” என தமிழ்நாடு அரசு வாதிட்டது.

”வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது காளையை ஒருவர் மட்டும்தான் தழுவுகிறார்கள். மூன்று நான்கு பேர் அதன் மீது விழுவதில்லை. அவை அனுமதிக்கப்படுவதில்லை என்பதை உங்களால் உறுதியாக கூறமுடியுமா?” என உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு,

“மிக நிச்சயமாக எங்களால் அதனைச் சொல்ல முடியும். காளை வருகிறது என்றால் ஒருவர்தான் அதை பிடிக்க முயல்வார். பிடிக்க முடியவில்லை என்றால் அவரும் விலகிவிடுவார். பிறகு காளை அதன் வழியில் சென்றுவிடும்; சில நேரங்களில் காளை அங்கேயே நின்று அனைவரையும் பார்க்கும். அப்போதும் யாரும் அதனை நெருங்க மாட்டார்கள். அதனை அதன் வழியில் விட்டுவிடுவார்கள்” என தமிழக அரசு பதில் வழங்கியது.

image

”தமிழகத்தின் நாட்டு மாடுகள் எண்ணிக்கை என்பது குறைந்துள்ளது. எனவே நாட்டு மாடுகள் இனம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவேதான் மத்திய, மாநில அரசுகள் நாட்டு மாடுகள் இனத்தை காக்க வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாட்டு காளைகள் இனம் இருந்தால் நாட்டு மாடுகள் இனம் முற்றிலும் அழிந்துவிடும். அது மிகவும் ஆபத்தானது” என தமிழக அரசு தெரிவித்தது.

”ஒருவேளை ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தம் கொண்டு வரவில்லை என்றால், இந்த விளையாட்டு என்பது குற்றமா? அப்படியெனில் என்ன நடந்திருக்கும்?” என நீதிபதிகள் கேட்டதற்கு,

“ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு இருந்தால், நாட்டு மாடுகள் இனம் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டிருக்கும் அல்லது அவற்றின் எண்ணிக்கை மிகமிக குறைந்திருக்கும். ஜல்லிக்கட்டு ஒரு வெறுக்கத்தக்க விளையாட்டாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். காளைகள் அதன் உண்மையான குணத்தில் இருந்து வலுக்கட்டாயமாக மாற்றப்படுகின்றன என கூறுகின்றனர். ஆனால் வன விலங்குகள் கூட அதனை பாதுகாக்க, அதன் நன்மைக்காக மனிதர்கள் பிடியில் வைக்கப்படுகிறது. பழக்கப்படுகிறது. இது எதற்காக என்றால் அதன் இனத்தை பாதுகாக்க,

எடுத்துக்காட்டாக புலி, சிறுத்தை உள்ளிட்டவை இனப்பெருக்கத்துக்காக பாதுகாக்கப்படுகின்றன. எனவே குணத்தில் இருந்து மாற்றுவது என்பது கடினமான வழிமுறை தான். ஆனால் அந்த விலங்கின் நன்மைக்காக அதனை பழக்கப்படுத்துவது என்பதை எவ்வாறு கொடுமை என கூறமுடியும்?” என தமிழக அரசு தெரிவித்தது.

image

வாடிவாசலில் இருந்து காளை வெளியே வரும்போது எத்தனை நொடிகள் மாடுபிடி வீரர்கள் அதனைப் பிடித்து வைப்பர்? என நீதிபதிகள் கேட்டபோது,

மூன்றுமுறை காளை குதிக்கும். அந்த மூன்றுமுறை குதிக்கும்போது எவர் ஒருவர் அதன் திமிலைக் கெட்டியாக பிடித்து தொங்குகின்றனரோ அவர் வெற்றிபெற்றவர். அதே வேளையில் முதல் தடவை குதிக்கும்போது வீரர் தூக்கி எறியப்பட்டால், காளை வென்றதாக அறிவிக்கப்படும். அந்த காளையை வேறு எவரும் அடக்க முற்பட மாட்டார். அந்த காளை நேராக அந்த அரங்கத்தை விட்டு வெளியேறும் வழிக்கு சென்றுவிடும். இந்த நடைமுறையில் எங்கு காயப்படுத்தப்படுகிறது” என தமிழக அரசு கூறியது.

இன்றைய அலுவல் நேரம் முடிந்ததையடுத்து ஜல்லிக்கட்டு வழக்கின் அடுத்த விசாரணை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தகவல் -நிரஞ்சன் குமார், தொகுப்பு - சினேகதாரா

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்