Published : 01,Dec 2022 02:40 PM
மாசடைந்த ஆறு... குடிநீரை விலைக்கு மட்டுமே வாங்க வேண்டிய அவல நிலையில் ஒரு கிராமம்!

பல ஆண்டுகளாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் குமரி மாவட்டத்திலுள்ள பூவாடி என்ற கிராமத்தின் மக்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டில் உள்ளது பூவாடி கிராமம். நெல் விவசாய நிலம் அதிகமாக உள்ள இந்தக் கிராமத்தில் பல ஆண்டுகளாக சுமார் 30 விவசாய குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இந்த பகுதியின் ஒரு பகுதி வழியாக வள்ளி ஆறும், இன்னொரு புறம் பெரிய குளம் என்ற குளமும் உள்ளது. இந்த கிராமம் மிக அழகான கிராமம் என்பதுடன் இந்த பகுதியில் தண்ணீருக்கு எந்த பஞ்சமும் இல்லை. ஆனால் இங்கு கிடைக்கும் தண்ணீரை குடிதண்ணீராக பயன்படுத்த முடியாது என்பதால் இங்கு உள்ள இந்த 30 விவசாய குடும்பங்களும் குடிதண்ணீருக்காக வள்ளி ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இந்த ஆற்று தண்ணீர் சில ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் மாசடைந்து காணப்படுவதால் ஆற்றில் இருந்து தண்ணீரை எடுப்பதை நிறுத்தி விட்டு காசு கொடுத்து தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு இங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதி மக்கள் மணவாளக்குறுச்சி பேரூராட்சி நிர்வாகத்திடம் தங்களது கிராமத்திற்கு குடிதண்ணீர் குழாய் பேரூராட்சி சார்பில் பதித்து சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் விநியோகம் செய்ய கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் கோரிக்கை வைத்து பல ஆண்டுகளாகியும் இதுவரை பேரூராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் குடிநீர் குழாய் பதித்து சுத்திகரித்த தண்ணீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள், தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் கட்சியினர் நாங்கள் வெற்றி பெற்றால் உங்களது கிராமத்தில் சுத்திகரிப்பட்ட தண்ணீர் தர நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதியை அளித்து செல்கிறது.
ஆனால் இதுவரை வெற்றி பெற்று வந்த எந்த மக்கள் பிரதிநிதிகளும் தங்களது குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுவதுடன் தங்களது கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்தை தொடர்புகொண்டு கேட்டபோது இதுகுறித்து புகார் எதுவும் கிடைக்கவில்லை என்றும் இருப்பினும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.