Published : 30,Nov 2022 06:19 PM
அஜித் - விஜய் ரசிகர்களின் சாலை விதி மீறல்களும் - போக்குவரத்துத்துறையின் பதிலும்!

பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இந்த திரைப்படங்களில் உள்ள விஜய் மற்றும் அஜித் கெட்டப்களின் புகைப்படங்களை தங்களின் ஆட்டோக்களில் போக்குவரத்து விதிமுறையை மீறி ரசிகர்கள் ஒட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒருபுறம் பொதுஇடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள்மீது போக்குவரத்துத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. மறுபுறம் அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையேயான கோல்டு வார் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
இந்நிலையில் பொது இடங்களில் ’துணிவு’ அஜித் புகைப்படத்துடன் வலம் வரும் ஆட்டோவை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து சென்னை போக்குவரத்து காவல்துறையிடம் நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ’வாரிசு’ திரைப்பட போஸ்டர் ஒட்டப்பட்ட ஆட்டோக்களின் புகைப்படங்களை மற்றொரு நபர் வெளியிட்டு ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இவர்கள் அளிக்கும் அனைத்து புகார்களையும் சென்னை போக்குவரத்துக் காவல்துறை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்துவருவதாக அதே சமூக வலைதளத்தில் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.