இப்படி ஒரு சோதனையா? 14 இங்கிலாந்து வீரர்களுக்கு வைரஸ் அட்டாக்! போட்டியை ஒத்திவைக்க முடிவு!

இப்படி ஒரு சோதனையா? 14 இங்கிலாந்து வீரர்களுக்கு வைரஸ் அட்டாக்! போட்டியை ஒத்திவைக்க முடிவு!
இப்படி ஒரு சோதனையா? 14 இங்கிலாந்து வீரர்களுக்கு வைரஸ் அட்டாக்! போட்டியை ஒத்திவைக்க முடிவு!

பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் பெரும்பான்மை ஆனவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், நடக்கவிருந்த முதல் டெஸ்ட் போட்டியை ஒத்திவைக்க விவாதத்து வருகின்றன இரண்டு கிரிக்கெட் அணிகளின் நிர்வாகங்கள்.

இங்கிலாந்து அணி கடந்த செப்டம்பர் மாதம் 7 டி20 போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாட பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

எந்த பெரிய அணிகளும் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாத நிலையில், தற்போது ஒவ்வொரு அணியாக வரவழைத்து போட்டியை நடத்தி வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அந்தவகையில் பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து அணி செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றி தோல்வி, வெற்றி தோல்வி இரு அணிகளும் டஃப் கொடுக்க 2-2 என்ற கணக்கில் இருந்த தொடரை, கடைசி 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 4-3 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றிருந்தது இங்கிலாந்து அணி.

தற்போது 2022 டி20 உலகக்கோப்பை முடிவடைந்த நிலையில், மீதமிருந்த 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க மீண்டும் பாகிஸ்தானிற்கு சென்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நாளை புதன் கிழமை, டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், கிட்டத்தட்ட 14 இங்கிலாந்து வீரர்களுக்கு வைரஸ் பரவி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதுகுறித்து செய்தி வெளியிட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில், "சில இங்கிலாந்து வீரர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் தொடங்குவது குறித்து PCB மற்றும் ECB ஆலோசித்து வருகின்றன. PCB தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது, ECB உடன் தொடர்பில் உள்ளது மற்றும் சரியான நேரத்தில் மேலும் புதுப்பிப்புகளை வழங்கும்" என்று பிசிபி ட்வீட் செய்தது.

இந்நிலையில் இன்று பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பயிற்சி செய்ய, ஹாரி புரூக், சாக் க்ராலி, கீட்டன் ஜென்னிங்ஸ், ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகிய ஐந்து இங்கிலாந்து வீரர்கள் மட்டுமே வந்தனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உட்பட மற்ற அணி உறுப்பினர்கள் விடுதியிலேயே இருந்தனர்.

வீரர்களின் நிலை குறித்து பேசியிருந்த ஜோ ரூட், "எனக்குத் தெரிந்தவரை, ஒரு சில வீரர்கள் 100% நன்றாக இருப்பதாக உணரவில்லை. நேற்று நான் கூட நன்றாக உணரவில்லை, ஆனால் இன்று நான் நன்றாக எழுந்தேன். எனவே இது 24 மணிநேர வைரஸ் என்று நான் நம்புகிறேன். இது புட் பாய்சன் அல்லது கோவிட் போன்றது என்று நினைக்க வேண்டாம். இந்த விளையாட்டுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்ய முயற்சிக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து பேசியிருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், "அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். நாளை முழு வலிமை கொண்ட இங்கிலாந்தை எதிர்கொள்ள விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வீரர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, முதல் டெஸ்ட் போட்டியை பின்னொரு நாளில் நடத்துவது குறித்து இரண்டு கிரிக்கெட் அணி நிர்வாகமும் கலந்து பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com