Published : 28,Nov 2022 01:44 PM

ஒரு புறம் தலைதூக்கும் கொரோனா... மறுபுறம் வெடிக்கும் போராட்டம் - சமாளிக்குமா சீன அரசு!

Protests-erupt-across-China-against-Zero---Covid-policy

சீனாவில் ஒருபுறம் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துவருகின்றன. 

2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமான உயிரிழப்பு, பொதுமுடக்கம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி என உலகமே இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல கொரோனா திரிபுகள், பல்வேறு அலைகளாக பரவி, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, தொற்றின் தாக்கமானது ஓரளவிற்கு ஓய்ந்தபிறகு, ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவருகின்றனர். உலகளவில் பொருளாதாரமும் சற்று முன்னேறி வரும் நிலையில், தற்போது மீண்டும் சீனாவில் புதியவகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. இது உலக நாடுகளை மீண்டும் அச்சத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பூஜ்ஜிய - கொரோனா கொள்கை (zero-Covid policy) இன்றுவரை கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. சிறு தொற்று வெடிப்புகூட முழு நகரத்தையும் மூடும் சூழலை ஏற்படுத்தலாம் என்பதால், பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடுமையான தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இந்த கொள்கையானது தளர்த்தப்படாததால் அங்குள்ள மக்களுக்கு சோர்வு மற்றும் ஒருவித வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

image

இதனால் மக்கள் ஆங்காங்கே எதிர்ப்புகளைத் தூண்டி, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பூஜ்ஜிய - கொரோனா கொள்கைக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது அங்கு பெரும் போராட்டமே வெடித்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், கடந்த சில நாட்களாக எதிர்பாராத விதமாக மக்களின் எதிர்ப்பு அலைகளுக்கு ஆளாகியுள்ளார். சீனாவின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பூஜ்ஜிய - கொரோனா கொள்கைக்கு எதிராக தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பொதுவாக சீனாவில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது கடினம் என்றாலும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக கட்டாய கட்டுப்பாடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் பொதுவெளியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஜி ஜின்பிங் ஒழிக! கம்யூனிஸ்ட் கட்சி ஒழிக! என்று கோஷங்களையும் எழுப்ப ஆரம்பித்துள்ளனர். சீனாவின் முக்கிய வர்த்தகமையமான ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

image

கடந்த வியாழக்கிழமை ஜின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் நடந்த போராட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த கடுமையான பூஜ்ஜிய-கோவிட் நடவடிக்கைகளே மக்களின் எதிர்ப்புக்கு காரணியாக கருதப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்கள் வெளியான பிறகு, கொரோனா கட்டுப்பாடுகளே தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதியை அடைய தாமதமானது என்ற கருத்துக்களும் தற்போது பரவி வருகின்றன.

10 பேர் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஷாங்காய் முதல் தலைநகர் பெய்ஜிங் வரையிலான பொதுமக்கள் உரும்கியில் ஒன்றுதிரண்டனர். அவர்கள் பூக்கிய கோவிட் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தங்களுக்கு விடுதலை மற்றும் ஜனநாயகம் வேண்டுமெனவும் கோஷமிட்டு வருகின்றனர். மேலும் பல இடங்களில் பொதுமக்கள் பொதுமுடக்க தடுப்புகளை உடைத்து வீதிகளில் எறிந்துவருகின்றனர். பொதுமக்களுடன் கல்லூரி மாணவர்களும் பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். வெள்ளிக்கிழமை நடந்த இந்த போராட்டமானது உரும்கி நகரையே தலைகீழாக புரட்டிப்போட்டது. இந்த போராட்டமானது இன்று வரை பல இடங்களில் தொடர்ந்து வருகிறது.

image

சீனாவை பொருத்தவரை, கொரோனா தொற்றால் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் பொதுமுடக்கம், கொரோனா பரிசோதனைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு, சுதந்திரமின்மை போன்ற அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களால் மக்கள் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளனர்.
மற்ற நாடுகளைவிட சீனாவில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமுடக்கம் போன்றவை மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டாலும், அங்கு தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவது பொதுமக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் மீதான அதிருப்தியையும் எதிர்ப்பையும் கிளப்பிவருகிறது. இந்த நிலைமையை ஜின்பிங்கின் அரசு எவ்வாறு சமாளிக்கும் என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழும்பி வருகிறது. 

image

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்