Published : 27,Nov 2022 02:06 PM
நடந்து முடிந்தது தமிழக இரண்டாம் நிலை காவலர் தேர்வு! சுமார் 67,000 பேர் பங்கேற்கவில்லை?

சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் 81.76 சதவீதம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 18.24 சதவீதம் பேர் தேர்வு எழுத வருகை தரவில்லை.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள 3552 ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வு தமிழகம் முழுவதும் 295 மையங்களில் இன்று நடைபெற்றது.
காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.40 மணி வரை தேர்வு நடைபெற்றது. தமிழ் மொழி, பொது அறிவு, உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து 150 வினாக்களுக்கு தேர்வு நடைபெற்றது.
2,99,887 ஆண்களும், 66,811 பெண்களும், 59 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 3,66,727 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் மொத்தம் 2,99,820 பேர் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதினர். மீதமுள்ள 66,908 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதன் மூலம் சுமார் 81.76 சதவீதம் தேர்வர்கள் தேர்வில் பங்கேற்றனர் என்பது தெரியவந்துள்ளது. 18.24 சதவீதம் தேர்வில் பங்கேற்க வருகை தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.