Published : 24,Nov 2022 06:47 PM

‘காந்தாரா’ படத்தின் உயிர் ஜீவனான ‘வராஹ ரூபம்’ பாடலின்றி ஓடிடி ரிலீஸ் - நடந்தது என்ன?

Kantara-on-Prime-Rishab-Shetty-s-blockbuster-gets-digital-premiere-with-new-version-of-Varaha-Roopam-song

அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘காந்தாரா’ படத்திலிருந்து ஒரிஜினல் ட்ராக்கான ‘வராஹ ரூபம்’ பாடல் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில், கன்னடத்தில் கடந்த செப்டம் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தத் திரைப்படம், இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. குறிப்பாக இந்தியில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசூலை விட அதிகளவில் ‘காந்தாரா’ படம் வசூலித்துள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பிரபாஸ், சிம்பு, கங்கனா ரனாவத், கார்த்தி உள்பட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தை பாராட்டியுள்ளனர். அத்துடன் இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடல் கூஸ் பம்ப் ஆக இருந்தது. சொல்லப்போனால் அந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் இந்தப் பாடலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை எனலாம். ஆனால் இந்தப் பாடல் தான் காப்புரிமை சர்ச்சையில் சிக்கி தடை விதிக்கும் அளவுக்கு கடந்த மாதம் சென்றது.

image

‘96’ படம் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில் இசையமைத்து வரும் கோவிந்த் வசந்தாவின் இசைக்குழு தான் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’. இவரும், இவரது நண்பர்களும் இணைந்து நடத்திவரும் இந்த இசைக்குழு, மலையாள மொழியில் தனிப் பாடல்களை இயற்றி வெளியிட்டும் வருகிறது. அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு ‘நவரசம்’ என்கிற பாடலை இக்குழு இயற்றி வெளியிட்டது. யூடியூபில் வெளியான இந்தப் பாடலை பல லட்சம் பேர் பார்த்து ரசித்திருந்தனர்.

அந்தப் பாடலும், ‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலும் ஒன்றாக இருப்பதாக படம் வெளியானப் போதே சர்ச்சை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து ‘நவரசம்’ பாடலின் காப்பிதான் ‘வராஹ ரூபம்’ எனக் குற்றம்சாட்டிய ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ இசைக்குழு, இரண்டு பாடலுக்கும் தவிர்க்க முடியாத நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்று தெரிவித்ததுடன் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு, அத்துடன் காப்புரிமை சட்டத்தை மீறியதாக கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழுவின் அனுமதியின்றி ‘காந்தாரா’ படத்தில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடலை அதன் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், Amazon, YouTube, Spotify, Wynk Music, Jiosavan போன்ற எந்தவொரு ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்தது. எனினும், யூட்யூப் தளத்தில் இந்தப் பாடல் அதன்பிறகும் பல மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து வந்தநிலையில் சமீபத்தில்தான் இந்தப் பாடல் நீக்கப்பட்டது.

image

இந்நிலையில், படம் வெளியாகி 54 நாட்களை எட்டியதை அடுத்து, இந்தப் படம் நேற்றிரவு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால், இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் உயிர்நாடியான ‘வராஹ ரூபம்’ பாடல், நீதிமன்றத்தின் தடையை அடுத்து ஒரிஜினல் ட்ராக் (Original Track) மாற்றம் செய்யப்பட்டு புதுப்பாடலுடன் வெளியாகியுள்ளது. தற்போது அந்தப் பாடலின் இசையை கேட்டவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும், மீண்டும் பழைய ‘வராஹ ரூபம்’ பாடலை இணைத்து வெளியிடுமாறு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தடைக்கு காரணமான தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு தனது சமூகவலைத்தளத்தில் நீதி வென்றது என்று பதிவிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, “அமேசான் பிரைம் எங்களது பாடலான ‘நவரசம்’ பாடலின் காப்புரிமை மீறப்பட்ட பதிப்பான ‘வராஹ ரூபம்’ பாடலை ‘காந்தாரா’ திரைப்படத்திலிருந்து நீக்கியுள்ளது. நீதி வென்றது. எங்களது வழக்கறிஞர் சதீஷ் மூர்த்தி மற்றும் எங்களது வழிகாட்டியான மாத்ருபூமி ஆகியோரின் மனம் தளராத முழு ஆதரவுக்கு நன்றி. எங்களது உரிமைகளுக்காகப் போராட, முழு மனதுடன் ஆதரவளித்த எங்களது இசைக்கலைஞர்கள், சகோதரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி” என்று கூறப்பட்டுள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்