Published : 19,Nov 2022 08:19 PM

அமானுஷ்ய பிரச்னையில் மிரட்டலான ஹாரர் ஜானர் படம் - ‘ஸ்மைல்’ எப்படி இருக்கு? #திரைவிமர்சனம்

Horror-and-Psychological-horror-movie-Smile-review

டாக்டர் ரோஸ் கார்டர் ஒரு அமானுஷ்யமான பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார், அதிலிருந்து அவர் தப்பினாரா இல்லையா என்பதுதான் ‘ஸ்மைல்’ படத்தின் ஒன்லைன்.

பார்கர் ஃபின், தான் எடுத்த ‘Laura Hasn't Slept’ குறும்படத்தை மையமாக வைத்து இந்த `ஸ்மைல்’ படத்தை இயக்கியிருக்கிறார். ரோஸ் கார்டர் (Sosie Bacon) ஒரு மனநல மருத்துவர். மனநலம் சார்ந்த ஆலோசனைகள் அளிப்பது, விரைவில் நடக்க இருக்கும் அவரது திருமணம் என நகரும் அவரது வாழ்க்கையை, ஒரு நாள் புரட்டிப் போடுகிறது. லாரா (Caitlin Stasey) என்றப் பெண் ரோஸிடம் அழைத்து வரப்படுகிறார். அவரை அழைத்து வந்த காவல்துறையினர், லாரா ஒரு தற்கொலை வழக்கின் ஐ-விட்னஸ். இறந்துப்போன பேராசிரியர் எதனால் தற்கொலை செய்து கொண்டார், அங்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். ஆனால், லாரா சொல்வது எதுவும் நம்பும்படி இல்லை என்கிறார்கள். மெல்ல லாராவிடம் பேச்சு கொடுக்கிறார் ரோஸ்.

போலீஸிடம் சொன்ன அதே விஷயத்தை மறுபடி சொல்கிறார் லாரா. அந்த சம்பவங்களைக் கேட்கும் ரோஸ் கார்டருக்கும் அவை நம்பும்படி இல்லை. ஆனால் ஒரு அசம்பாவிதத்திற்குப் பிறகு, லாரா தனக்கு நடந்ததாக சொன்ன விஷயங்கள் எல்லாம் ரோஸின் வாழ்விலும் நடக்கத் துவங்குகிறது. முதலில் இவற்றை தற்செயல் என நினைக்கும் ரோஸ், பின்பு ஆபத்தைப் புரிந்து கொள்கிறார். இதில் சிக்கும் ஒவ்வொருவரும் அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் தற்கொலை செய்து இறந்துவிடுவார்கள், அதுவும் முகத்தில் ஒரு குரூரமான சிரிப்புடன் எனத் தெரிந்து கொள்கிறார் ரோஸ். மனநல மருத்துவரான ரோஸே ஒரு மனநோயாளி ஆகும் அளவுக்கு நிலமை கைமீறிச் செல்கிறது. ரோஸை சுற்றி என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? இதிலிருந்து அவர் தப்பினாரா? இல்லையா? என்பதெல்லாம் தான் ‘ஸ்மைல்’.

image

முதன்மைக் கதாபாத்திரமான ரோஸ் கார்டராக நடித்துள்ள சோசி பேக்கன் மிகப் பொருத்தம். படம் முழுக்க டிஸ்டர்ப்டான மனநிலையிலேயே இருக்கும் படியான பாத்திரம். சுற்றி நடக்கும் அமானுஷ்யமான விஷயங்களைப் பார்த்து பதறுவது, தன்னுடைய சூழலை மற்றவர்களிடம் விளக்க முயல்வது, எப்போதும் பயந்து நடுங்குவது என கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதை திரையில் கடத்தியிருக்கிறார். குறும்படத்தில் லாரா வேவராக நடித்த ஸ்டேஸி தான், ‘ஸ்மைல்’ படத்திலும் அதேபாத்திரத்தில் வருகிறார். தவிர துணை நடிகர்களாக ரோஸின் வருங்கால கணவர் ட்ரேவர் பாத்திரத்தில் நடித்துள்ள செஸ்ஸி உஷேர், சகோதரி ஹோலி பாத்திரத்தில் வரும் ஸின்செர், ரோஸியின் தெரபிஸ்ட்டாக வரும் ராபின் விக்கெர்ட், லாராவாக வரும் ஸ்டேஸி ஆகியோரும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஒரு ஹாரர் படத்திற்கு தேவையான அத்தனையும் உள்ள அட்டகாசமான களம், அதை வைத்து கதையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை தவறவிடாமல் செய்திருக்கிறார் இயக்குநர் பார்கர் ஃபின். படத்தின் ஜம்ப் ஸ்கேர் மொமண்ட்ஸ், ஒவ்வொரு காட்சிக்குள்ளும் வரும் ட்விஸ்ட் என அனைத்தும் நாம் யூகிக்க முடியாத வகையில் வடிவமைத்திருக்கிறார். ஒரு த்ரில்லர் படமாக இருந்தாலும், ரோஸி கதாபாத்திரம் தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பதை தேடி செல்லும் காட்சிகளும், ஒரு இன்வஸ்டிகேஷன் படம் போல் படுசுவாரஸ்யமாக அமைக்கப்பட்டிருந்தது.

image

‘Laura Hasn't Slept’ குறும்படம் முழுக்க லாராவை மையமாக வைத்து உருவாகியிருக்கும். அதைத் திரைப்படமாக மாற்றும் பொழுது புதிதாக ஒரு களத்தை உருவாக்கி, அதில் லாரா பாத்திரத்தையும் இணைத்திருந்த விதம் சிறப்பான பே ஆஃப். சார்லியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு மர்மமான உணர்வைக் கொடுக்கிறது. அதை மிகச் சரியாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் எலியாட்டும் பாராட்டப்பட வேண்டியவர். முக்கியமாக படத்தின் த்ரில் உணர்வை தனது பின்னணி இசை மூலம் அதிகப்படுத்துகிறார் கிறிஸ்டோபால்.

படத்தின் குறை எனப் பார்த்தால் தனக்கு நிகழும் விஷயங்களுக்கான காரணத்தை தேடி செல்லும் ரோஸி கதாபாத்திரம், அதனைத் தெரிந்துக்கொண்டப் பின் என்ன செய்கிறார் என்ற காட்சிகள் அத்தனை பொருத்தமாக இல்லை. கூடவே படத்திற்குள் ஒரு சைகலாஜிக்கல் கோணத்தை கொண்டு வந்து ரோஸி கதாபாத்திரத்தின் சிறு வயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. படம் சுவாரஸ்யமாக முடியும் என எதிர்பார்க்கும் பொழுது அதில் ஒரு ட்விஸ்ட் வைத்து, மறுபடி ஆரம்பித்த இடத்திற்கே வருகிறது கதை. அதனால் படத்தில் ஒரு முழுமையான உணர்வு நமக்கு கிடைக்கவிலை. இதுபோல சில குறைகள் இருந்தாலும், ஒரு ப்யூர் ஹாரர் ஜானர் படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக அமையும் படம்.

படத்தில் எக்கச்செக்க வன்முறை, இரத்தம் இருக்கிறது என்பதால், கண்டிப்பாக அடல்ட்ஸ் ஒன்லி. இதை மனதில் வைத்துக் கொண்டு படத்தைப் பார்க்கவும்.

- பா.ஜான்சன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்