Published : 18,Nov 2022 02:36 PM

ட்விட்டர் ஆஃபிஸை மூடுவதாக ட்விட்டரிலேயே ட்வீட் போட்ட ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க்!

rip-twitter-hashtags-trending-in-twitter

சமூக வலைதளங்களின் மைக்ரோ பிளாக்கிங் தளமாக இருக்கக் கூடிய ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கியதை தொடர்ந்து அந்நிறுவனம் முழுவதும் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து எடுத்த எடுப்பிலேயே ட்விட்டரின் சி.இ.ஓவாக இருந்த பராக் அக்ரவாலை பணி நீக்கம் செய்த எலான் மஸ்க், தலைமை நிதி அதிகாரி, சட்டத்துறை தலைவர், பொது ஆலோசகர் என பல முக்கிய அதிகாரிகளையும் நீக்கினார்.

இதுபோக, ட்விட்டரின் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் வகையில் பல முக்கிய டெக் ஊழியர்களையும் சடசடவென எலான் நீக்கி வருகிறார். மேலும், ப்ளூ டிக்-க்கு கட்டணம் வசூலிப்பது குறித்த செய்திகளும் உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. அதே நேரத்தில் வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் வசதியை ரத்து செய்து அனைவரையும் அலுவலகத்துக்கு வரும்படி பணித்திருக்கிறார்.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பதால் ஊழியர்கள் அனைவரும் கூடுதலாக பணியாற்ற வேண்டும் எனக் கூறி மெயிலும் அனுப்பப்பட்டிருக்கிறது. இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் டெக் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் அலுவலகம் நவம்பர் 21 வரை தற்காலிகமாக மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டதோடு, ட்விட்டர் குறித்து பொதுவெளியில், ஊடகங்களில் விவாதிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது..

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்கே, ட்விட்டரில் ட்விட்டரை மூடுவதாகக் குறிப்பிட்டு ஒரு மீமை ஷேர் செய்திருக்கிறார். இது நொடிப்பொழுதில் வைரலாகவே, #RIPTwitter #GoodByeTwitter போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரிலேயே நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், “இப்போதான் 10 ஆயிரம் ஃபாலோயர்ஸ்களை சிறுக சிறுக சேர்த்து வெச்சிருந்தேன். இப்படி இழுத்து மூடிட்டாங்களே” , “குட் பை ட்விட்டர்” , “எல்லாரும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பக்கம் வாங்க” என்றெல்லாம் ட்விட்டரிலேயே நெட்டிசன்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்