சில்க் ஸ்மிதாவை மறக்க முடியுமா?

சில்க் ஸ்மிதாவை மறக்க முடியுமா?
சில்க் ஸ்மிதாவை மறக்க முடியுமா?

சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டு இறந்தநாள் இன்று. சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் அவரின் படத்தை தங்களது சமூக வலைதள பக்கங்களில் முகப்பு படமாக வைத்து நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா உலகை தனி பெண்ணாக கட்டி ஆண்டு கொண்டிருந்த நடிகை சில்க் ஸ்மிதா. வண்டிச்சக்கரம் படத்தில் நாட்டுப்புற பார்கேர்ள் ஆக நடிக்கும் கதாபாத்திரம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதில் அவரது பெயர் சில்க். அன்று முதல் சில்க் ஸ்மிதா ஆக அரிதாரம் பூசினார். அவரது உண்மையான பெயர் விஜயலக்ஷ்மி. ஆந்திர மாநிலத்தை பூர்வீகம் என பலர் இவருக்கு வரலாறு எழுதினாலும் சில்க் தன்னை ’கரூர் பொண்ணு’என்றே குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். சினிமாவில் முதல் அடியே அவருக்கு அமர்க்களமாக அமைந்தது. அதன் பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 17 வருடங்கள் தென் இந்திய சினிமா உலகம் அவருக்காக காத்திருந்தது. 500 படங்கள் வரை நீண்டது அவரது நடிப்பு பட்டியல்.

பெரிய பெரிய கதாநாயாகர்களே இவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடினால்தான் படம் ஹிட் ஆகும் என்று நம்ப ஆரம்பித்தனர். பல ஏரியாக்கள் கொண்ட சினிமா உலகில் பி அண்ட் சி ரசிகர்கள் மத்தியில் ஸ்மிதாவுக்கு என்று தனி இடம் இருந்தது. அவரை வைத்தே விநியோகஸ்தர்கள் வியாபாரம் பேசிய காலம் இருந்தது. இவரது அடையாளம் கவர்ச்சி என சொன்னாலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ ‘அவசர போலீஸ் 110’ ‘தாலாட்டு கேட்குதம்மா’ என சில படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் சில்க். 


இவரை முன்மாதிரியாக வைத்து அனுராதா, டிஸ்கோ சாந்தி, குயிலி என பலர் புறப்பட்டார்கள். அத்தனை பேரும் தனக்குப் போட்டி என்று தெரிந்தும் அவர்கள் அனைவருடனும் நல்ல நட்பை வைத்திருந்தார் சில்க். இவர்களை வைத்து தனது தயாரிப்பில் படங்களை கூட தயாரித்தார். 

வாழும் போது எப்படி பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த சில்க்கின் மரணச் செய்தி, சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

1996 செப்டம்பர் 23ம் தேதி அவரது வீட்டில் அவர் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடந்தார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து தி டர்ட்டி பிக்சர் என்று படம் எடுக்கும் அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்த நடிகை இவர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com