Published : 16,Nov 2022 06:14 PM

இந்தியா வசம் வந்தது ஜி20 தலைமை பொறுப்பு.. அடுத்த ஆண்டு மாநாட்டில் இதுதான் ஹைலைட்டாம்!

India-takes-over-G20-presidency-for-2023-PM-Modi-extends-invitation

ஜி-20 மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியாவிடம் வழங்கியது இந்தோனேஷியா. இதனையடுத்து 2023-ம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.

இந்தியா, இந்தோனேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், சீனா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் முக்கியமான கூட்டமைப்புகளில் ஒன்று "ஜி-20".

ஜி-20 அமைப்பின் தலைவராக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வரும் நிலையில், 2022 ஆண்டிற்கான ஜி-20 தலைமை பொறுப்பை இந்தோனேஷியா ஏற்று அந்நாட்டின் பாலியில் உச்சி மாநாடும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ‘அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது, அமைதியான தீர்வு, நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள், இராஜதந்திரம் மற்றும் உரையாடல் ஆகியவை இன்றியமையாதவை உள்ளிட்ட விஷயங்களோடு, பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பான இந்த சகாப்தம் போர்களால் ஆனாதாக இருக்கக்கூடாது என்ற விஷயமும் சேர்க்கப்பட்டு உலகத் தலைவர்களின் கூட்டுப் பிரகடனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு (2023) தலைமை பொறுப்பு இந்தியாவிடம் இன்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் இறுதி நாளான இன்று, முறைப்படி ஜி20 மாநாட்டின் கவுரவ பொறுப்பான சுத்தியலை பிரதமர் மோடியிடம், இந்தோனிசியா அதிபர் ஜோகோ விடோடோ வழங்கினார். இதனையடுத்து வரும் 2023 அக்டோபர் மாதம் 18-வது ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது.

image

இதுகுறித்து மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2023-ம் ஆண்டு இந்தியா நடத்தவுள்ள ஜி-20 மாநாடு அனைவரையும் உள்ளடக்கிய வகையில், தீர்க்கமாகவும் செயல் சார்ந்ததாகவும் இருக்கும் என்றும், அதேநேரத்தில் "ஜி 20" என்பது உலக அளவில் முதன்மையான குழுவாக செயல்படுத்துவதே இந்தியாவின் முயற்சியாக இருக்கும் என பேசினார்.

அடுத்த வருடம் இந்தியா நடத்தவுள்ள ஜி 20 மாநாட்டிற்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சி நிரலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும், ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்துவது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்றும், கலாச்சாரம், பண்பாடு என பன்முகம் கொண்ட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளதாகவும், ஜி-20 என்பதை உலக மாற்றத்திற்கான ஓரு தூண்டுகோலாக பயன்படுத்துவோம் என அவர் பேசினார்.

இந்த மாநாட்டில் பல உலக தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை பேசினார். இந்தோனேஷியாவின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மற்ற ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் ‘டமான் ஹுட்டான் ராய என்குரா ராய்' என்னுமிடத்தில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு சென்று பார்வையிட்டார். அதன்பிறகு தலைவர்கள் அனைவரும் புதிய மாங்குரோவ் செடிகளை நட்டனர்.

image

பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்-உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிற முக்கிய பிரச்சனைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் பேசியதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்-உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, பசுமைப் பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஃபின்டெக் மற்றும் வர்த்தக உறவுகளை அதிகரித்தல் போன்ற துறைகளில் இந்தியா-சிங்கப்பூர் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாநாடு தொடங்குவதற்கு முன்பாக விழா மேடையிலேயே பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஒருவரை ஒருவர் சந்தித்து கை குலுக்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதேபோல பிரிட்டன் பிரதமராக முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக்கும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக் கொண்டனர். பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி விழா அரங்கில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர். சிங்கப்பூர் பிரதமரை தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்