Published : 15,Nov 2022 11:26 AM

'ஐ.நா இந்த விஷயத்தில் தோல்வி அடைந்துவிட்டது'- ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Prime-Minister-Narendra-Modi-speech-on-g20-conference-2022

"இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு நடைபெறும் போது, உலகிற்கு அமைதிக்கான வலுவான செய்தியை தெரிவிக்க நாம் அனைவரும் உடன்படுவோம்" என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

ஜி-20 உச்சி மாநாடு இந்தோனேஷியாவில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு இந்தோனேஷியாவின் பாலி நகருக்கு சென்றார். இந்நிலையில் ஜி-20 உச்சி மாநாட்டில் இன்று உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ''சவாலான உலகளாவிய சூழலில் ஜி-20க்கு பயனுள்ள தலைமையை வழங்கியதற்காக அதிபர் ஜோகோ விடோடோவை மனதார வாழ்த்துகிறேன். காலநிலை மாற்றம், கொரோனா தொற்றுநோய், உக்ரைன் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்சினைகள், இவை அனைத்தும் சேர்ந்து உலகில் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் அழிந்து வருகின்றன. உலகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டின் ஏழைக் குடிமக்களுக்கும் உள்ள சவால் மிகவும் கடுமையானது. அன்றாட வாழ்க்கை அவர்களுக்கு ஏற்கனவே ஒரு போராட்டமாக இருந்தது. ஐ.நா போன்ற பலதரப்பு அமைப்புகள் இந்தப் பிரச்சினைகளில் தோல்வியுற்றன என்பதை ஒப்புக்கொள்ளவும் நாம் தயங்கக் கூடாது. மேலும் அவற்றில் பொருத்தமான சீர்திருத்தங்களைச் செய்ய நாம் அனைவரும் தவறிவிட்டோம். எனவே, இன்று உலகம் ஜி -20லிருந்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது.

image

உக்ரைனில் போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை பாதைக்குத் திரும்புவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் பலமுறை கூறியுள்ளேன். கடந்த நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போர் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. அதன் பிறகு அமைதிப் பாதையில் செல்ல அக்காலத் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இப்போது இது நமது முறை. கொரோனா காலத்திற்குப் பிறகு ஒரு புதிய உலக கட்டமைப்பை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது. உலகில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு தேவை.

புத்தர் மற்றும் காந்தியின் புனித பூமியில் (இந்தியாவில்) அடுத்த ஆண்டு ஜி20 மாநாடு நடைபெறும் போது, உலகிற்கு அமைதிக்கான வலுவான செய்தியை தெரிவிக்க நாம் அனைவரும் உடன்படுவோம் என்று நான் நம்புகிறேன். தொற்றுநோய்களின் போது, இந்தியா தனது 1.3 பில்லியன் குடிமக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது. அதே நேரத்தில், உணவு தானியங்கள் தேவைப்படும் பல நாடுகளுக்கும் வழங்கப்பட்டன. தற்போதுள்ள உரத் தட்டுப்பாடும் பெரும் நெருக்கடியாக உள்ளது. இன்றைய உரத் தட்டுப்பாடு, நாளைய உணவுப் பிரச்சினை என்பதை உணர்ந்து உலகம் இதற்கு தீர்வு காண வேண்டும்.

உரம் மற்றும் உணவு தானியங்கள் ஆகிய இரண்டின் விநியோகச் சங்கிலியையும் நிலையானதாகவும் உறுதியானதாகவும் பராமரிக்க பரஸ்பர ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். இந்தியாவில், நிலையான உணவுப் பாதுகாப்பிற்காக, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, தினை போன்ற சத்தான மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களை மீண்டும் பிரபலப்படுத்துகிறோம். தினைகள் உலகளாவிய ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியையும் தீர்க்கும். சர்வதேச தினை ஆண்டை நாம் அனைவரும் அடுத்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும்.

image

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பதால், இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு உலக வளர்ச்சிக்கும் முக்கியமானது. எரிசக்தி விநியோகத்தில் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் நாம் ஊக்குவிக்கக் கூடாது மற்றும் எரிபொருள் சந்தையில் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். தூய்மையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய நாட்டுக்கு தேவையான மின்சாரத்தில் பாதி புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும்.

தூய்மையான எரிசக்தி மற்றும் ஆற்றலை உருவாக்க தேவையான தொழில்நுட்பங்கள் வளரும் நாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டும். அத்துடன் தேவையான நிதி உதவி மற்றும் சலுகை வட்டி கடன் ஆகியவை பசுமை வலிகள் மூலம் வளரும் நாடுகள் ஆற்றலை உருவாக்கும் சக்தியை வளர்க்க அவசியம். இந்தியாவின் ஜி-20 தலைமை காலத்தில், இந்த அனைத்து விஷயங்களிலும் உலகளாவிய ஒருமித்த கருத்துக்காக நாங்கள் பணியாற்றுவோம்'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: கூகுள் முகப்பு பக்கத்தை அலங்கரித்த கொல்கத்தா பள்ளி மாணவனின் டூடுல்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்