Published : 13,Nov 2022 10:05 PM
தோற்றாலும் கோடிகளை அள்ளும் பாகிஸ்தான் அணி! முத்திரை பதித்த வீரர்கள் யார், யார்?-முழுவிவரம்

நடந்து முடிந்த 2022 டி20 உலகக்கோப்பை போட்டிகளில் பல வீரர்கள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர். எந்தெந்த வீரர்கள் என்னென்ன பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார்கள் என்றும், வெற்றி பெற்ற அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது என்றும் இந்த பதிவில் பார்ப்போம்.
2022 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை மதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
கோப்பையை வென்ற இங்கிலாந்து பரிசுத்தொகை
கோப்பையை வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 1.6 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 13 கோடி ஆகும்.
ரன்னரான பாகிஸ்தான் அணிக்கான பரிசுத்தொகை
இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்ற பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்தின் பரிசுத்தொகையில் பாதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் 6.5 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையிறுதி அணிகளுக்கான பரிசுத்தொகை
அரையிறுதிப்போட்டி வரை வந்து தோல்வியை தழுவிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கான பரிசுத்தொகையாக, இரு அணிகளுக்கும் தலா 3.22 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 12 அணிகளுக்கான பரிசுத்தொகை
சூப்பர் 12 சுற்றில் பங்கேற்ற மற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையாக நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகளுக்கு தலா 56 லட்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலை பார்க்கலாம்.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சாம் கரன் நிகழ்த்திய தனித்துவ சாதனை
24 வயதேயான இங்கிலாந்து அணியின் சாம் கரன், டி20 உலகக்கோப்பை தொடரின் வரலாற்றில் ”முதல்முறையாக தொடர் நாயகன் விருதைப்பெறும் முதல் பவுலர்” என்ற சாதனையை படைத்துள்ளார். ஆட்ட நாயகன் விருதை வென்ற அவர், தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார். இந்த டி20 தொடரில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு 5 விக்கெட்டுகள் கொண்ட போட்டியும் அடங்கும்.
ரன் குவிப்பில் யார் முதலிடம்?
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் விராத் கோலி 296 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடம்
பிடித்தார்.
நெதர்லாந்து அணியின் ஓ டவுட் (O'Dowd) 242 ரன்களுடன் இரண்டாவது இடத்தையும், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 239 ரன்களுடன்
மூன்றாவது இடத்தையும், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 225 ரன்களுடன் நான்காவது இடத்தையும், இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ் 223 ரன்களுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.
பந்துவீச்சில் யார் முதலிடம்?
பந்து வீச்சில், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 15 விக்கெட்டுகள் வீழ்த்தி பந்து வீச்சாளர்களில் முதலிடம் பிடித்தார்.
இங்கிலாந்தின் சாம் கரன் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாம் இடத்தையும். நெதர்லாந்தின் டி லீட் (de Leede) 13 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தையும், ஜிம்பாப்வேயின் முசாரபானி (Muzarabani) 12 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தையும், தென்னாப்பிரிக்காவின் நோர்க்கியா (Nortje) 11 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.
அதிக 50+ ரன்கள்
அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4 அரைசதங்களுடன் விராட் கோலி முதலிடத்திலும், சூரியகுமார் யாதவ் 3 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்திலும், நெதர்லாந்து வீரர் ஓடவுட் 2 அரைசதங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அதிக சதங்கள்
நியூசிலாந்தின் க்லென் பிலிப்ஸ், தென்னாப்பிரிக்காவின் ரிலீ ரோஷோவ் இருவரும் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.
அதிக சிக்சர்கள்
அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ராசா 11 சிக்சரகளுடன் முதலிடத்தில் உள்ளார். குசால் மெண்டிஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் 10 சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
அதிக பவுண்டரிகள்
26 பவுண்டரிகள் அடித்து இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் விராட் கோலி மற்றும் பட்லர் இருவரும் உள்ளனர்.
அதிக மெய்டன் ஓவர்கள்
3 ஒவர்கள் மெய்டன் ஓவர்களாக வீசி புவனேஷ் குமார் முதலிடத்தில் உள்ளார்.
ஒரே ஆண்டில் இரண்டுவித கோப்பை வென்று அசத்தல்
ஒரே சமயத்தில் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள ஒரே அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது. அடுத்த டி20 உலகக் கோப்பைத் தொடர், 2024-ல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
அசத்திய சாம் கர்ரன், ஸ்டோக்ஸ் - இன்றையப் போட்டியில் நடந்தது என்ன?
டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பாகிஸ்தான் பேட் செய்ய பணித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால், பாகிஸ்தான் வீரர்கள் ரன் எடுக்கத் தடுமாறினர். பாபர் ஆஸம் 32 ரன்களும், ஷான் மசூத் 38 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில், சாம் கரன் சிறப்பாகப் பந்து வீசி 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடில் ரஷீத், கிறிஸ் ஜோர்டான் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த ஹேல்ஸ், ஒரு ரன்னில் அவுட் ஆனார். அவருக்கு அடுத்து வந்தவர்கள் பொறுமையாக விளையாடினர். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், எந்த ஒரு நிலையிலும் இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படவில்லை. களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸும், மொயின் அலியும் ஒரு கட்டத்தில் அதிரடி காட்டினர். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தன. இறுதியில், 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்து வீச்சில் சிறந்து விளங்கிய இங்கிலாந்து வீரர் சாம் கரன் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.