Published : 12,Nov 2022 08:05 PM
அணையில் ஹாயாக வலம்வந்த சிறுத்தை - அரண்டுபோன பொதுப்பணித் துறை ஊழியர்கள்

பவானிசாகர் அணையின் மேல்பகுதியில் சிறுத்தை நடமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர் தேக்கப்பகுதியை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வசிக்கும் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அணை நீர் தேக்கப்பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துச்செல்வது வழக்கம். இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுப்பணித் துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருந்து அணை நீர் தேக்கப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பவானிசாகர் அணை மேல்பகுதியில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. பணியிலிருந்த பொதுப்பணித் துறை ஊழியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். சிறுத்தை அதே இடத்தில் நீண்ட நேரம் உலாவியதால் அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தை நடமாடிய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.