Published : 05,Nov 2022 06:50 PM

‘தேவர்மகன், விக்ரம் என கேரக்டரின் குணநலனுக்கு ஏற்ப சண்டைக்காட்சி’ -கமலின் ஆக்‌ஷன் அவதாரம்

Kamal-birthday-special-devar-magan-nayakan-vikram-kamal-haasan-s-different-fight-scenes

கமல்ஹாசன் மீது ஏராளமான பிம்பங்கள் இருந்தாலும் உடன் நினைவுக்கு வராத பிம்பம் சண்டைக் காட்சிகளில் கலக்கும் நடிகர் என்பது.

தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் கமல்ஹாசன் என்றாலே நல்ல நடிகர், காதல் காட்சிகளில் கலக்குபவர், நன்றாக பாடக் கூடியவர், நன்றாக நடனம் ஆடக்கூடியவர், காமெடி படங்களிலும் வல்லவர் என்ற பிம்பமே தோன்றும். ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் ஏராளமான வித்தியாசமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தவர் யார் என்று பார்த்தால் அதில் கமலே முண்ணனியில் இருப்பார்.

தமிழ் சினிமா சண்டைக்காட்சிகள் என ஒரு வரலாற்றைப் பார்த்தால் ஆனந்தன், எம்.ஜி. ராமச்சந்திரன் காலத்தில் வாள் வீச்சு பிரபலமாக இருந்தது. பின்னர் சாண்டோ சின்னப்பா தேவர் – எம்.ஜி.ஆர் இணை சிலம்ப சண்டைக்காட்சிகளை கொண்டு வந்தது. பின் வழக்கமான சினிமா சண்டைகளே தமிழ் சினிமாவை ஆக்ரமித்து இருந்தன.

ஒளிப்பதிவாளர்- இயக்குநர் கர்ணன் தன் படங்களில் குதிரை சண்டைகள், பைக்-கார் சேஸிங் என விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளை கொண்டு வந்தார். மற்ற இயக்குநர்களின் படங்களில் மாஸ்டர்கள் வழக்கமான சண்டைக் காட்சிகளையே அமைத்து வந்தார்கள்.

imageஇந்நிலையில் எழுபதுகளின் இறுதியில் தொடங்கி எண்பதுகளின் ஆரம்பம் வரை ஹாலிவுட் படங்கள் முக்கியமாக புரூஸ்லியின் ‘எண்டர் தி ட்ராகன்’ போன்ற படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. இது மாதிரி சண்டைக் காட்சிகள் தமிழ் சினிமாவில் வராதா என ரசிகர்கள் ஏங்கிய போது இந்த சண்டைக்காட்சிகளின் பாதிப்பில் ஜூடோ ரத்னம், சூப்பர் சுப்பராயன் போன்ற மாஸ்டர்கள் சண்டைக் காட்சிகளை அமைக்க ஆரம்பித்தனர்.

கமலின் ஆரம்ப காலப் படங்களிலும் சண்டைக் காட்சிகள் ஹாலிவுட், சீன படங்களின் பாதிப்பில் தான் இருக்கும். ‘ராம் லட்சுமண்’ படத்தில் வரும் சிலம்பு, ஜூடோ, கராத்தே சண்டை, ‘சகலகலா வல்லவனில்’ ஒரு சகதி சண்டை, சிலம்பு சண்டை, கார் சேஸிங் என மசாலா படங்களுக்குரிய சண்டைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். ‘தூங்காதே தம்பி தூங்காதேயில்’ உட்காரும் பெஞ்ச் வைத்து போடும் சண்டையும் ரசிகர்களை கவர்ந்த ஒன்று.
அதன்பின் வந்த ‘காக்கிச் சட்டையில்’ ட்ரைலர் லாரியில் நடக்கும் சண்டைக்காட்சி மறக்க முடியாத ஒன்று. அப்படம் வந்து சில ஆண்டுகள் வரை ட்ரைலர் லாரியை அடையாளம் சொல்ல ‘காக்கிச்சட்டை’ படத்துல வர்ற லாரி என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘காக்கி சட்டை’ படத்தில் ஒரு கையால் தண்டால் எடுப்பது, குழாயைப் பிடித்து சரசரவென ஏறுவது என பல காட்சிகள் இருக்கும்.

‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் புது ரோசாப் பூவு பாடலில் கமலுக்கு சற்று உயரத்தில் ஒரு கூண்டினுள் நின்று நடிகை ஆடிக்கொண்டு இருப்பார். படப்பிடிப்பில் திடீரென கூண்டு அறுந்து கமலின் வயிற்றின் மீது நடிகை கூண்டோடு விழுந்தார். அனைவரும் பதறி விட்டனர். ஆனால் கமல் தன் மூச்சை இழுத்துப் பிடித்து வயிற்றைக் கல்லாக்கியதால் தப்பித்தார். இதன்பின்னரே கமல் தன் ஸ்டண்ட் யூனியன் ஆட்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்தார். ‘புன்னகை மன்னன்’ படத்தில் தற்கொலை செய்ய குதித்து மரத்தில் தொங்கும் காட்சி போல பல ரிஸ்கான காட்சிகளில் அக்காலத்தில் நடித்து வந்தார்.

image

அப்போதிருந்த மாஸ்டர்கள் வழக்கமாக ஒரே மாதிரி ஹீரோ அடித்தால் வில்லன் அடியாட்கள் பறந்து போய் விழுவது போன்றே காட்சிகள் அமைத்து வந்தார்கள். கமலுக்கு அதில் திருப்தி இல்லை. அவர் அலைவரிசைக்கு ஏற்ப கொஞ்சம் ரியலிஸ்டிக்காகவும் இருக்க வேண்டும், பார்வையாளனை பரபரப்பில் ஆழ்த்த வேண்டும் எனவும் நினைத்தார். அதனால் புதுப்புது திறமைகளை உள்ளே கொண்டுன் வந்தார். ‘விக்ரம்’ (1986) படத்தில் தர்மாவை ஊக்குவித்தார். அந்தப் படத்தில் வரும் சேஸிங் காட்சிகள் எல்லாம் சிறப்பாக அமைந்தன.

கமல் அப்போது சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லும் போது, படம் பார்த்துட்டு வர்றவன் நெஞ்சை நிமித்திட்டு வர்ற மாதிரி இருக்கனும், யாராச்சும் தப்பு செஞ்சா சட்டையப் பிடிச்சு உலுக்கிற மாதிரி ஒரு வெறி ஏறனும் என்பார். ‘நாயகன்’ படமே சண்டைக் காட்சிகளிலும் கமலுக்கு திருப்பத்தை தந்தது எனலாம். அதன் பின்னரே அவர் சற்று ரியலிஸ்டிக்கான சண்டைக் காட்சிகளின் பக்கம் திரும்பினார். சர்க்கரை கரைசலால் ஆன பாட்டிலை சண்டைக் காட்சிகளுக்கு பயன்படுத்தினார்.

ரத்தத்திற்குப் பதில் சிகப்பு சாயம் ஊற்றுவதை நிறுத்தினார். அதற்கென சில பொருட்களை பயன்படுத்தினார். காயங்கள் காயம் போலவெ தெரிய ஆரம்பித்தன. அடுத்து வந்த ‘சத்யா’ படத்தில் சண்டைக் காட்சிகளில் சூப்பர் ஹீரோத்தனம் இல்லாமல் சற்று ரியலிஸ்டிக்கான சண்டைக் காட்சிகளே இடம் பிடித்தன. பாலத்தின் மீதேறி தப்பி ஓடும் கமலின் நண்பனை காலில் வெட்டும் காட்சிகள் அப்போது தமிழுக்குப் புதிது.

image

‘தேவர்மகனில்’ இன்னும் மெருகேறியது சண்டைக் காட்சிகள். சிலம்பு குச்சியில் சுண்ணாம்பு தடவி பொட்டு வைப்பது, நாசருடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை என சிறப்பாக அமைந்தது. அதில் நாசரின் தலை தனியே பூமியில் விழுந்திருப்பதில் கமலின் மேக்கப் ஈடுபாடு பயன்பட்டிருக்கும். ‘மகாநதி’ படத்தில் கையை வெட்டிக் கொள்ளும் காட்சி லாஜிக்கலாக அமைந்தது.

‘குருதிப்புனலின்’ ரயிலின் முன் தாவும் காட்சி, சில துப்பாக்கிச் சூடு காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். ‘இந்தியனில்’ சுதந்திர போராட்ட வீரனின் சண்டைக் காட்சிக்கும், மகன் கமலின் சண்டைக் காட்சிக்கும் பெரிய வேறுபாடு இருக்கும். பெரியவராக வர்மக்கலை உபயோகித்து போடும் சண்டைகளும் செம ஸ்டைலாக இருக்கும். (நெடு முடி வேணுவை தாக்கி தப்பிக்கும் காட்சி).

அதன்பின் எடுத்து கைவிடப்பட்ட ‘மருதநாயக’ ட்ரெயிலரிலேயே நான்கைந்து சண்டைக் காட்சிகள் இருக்கும். வேலால் ஒருவர் குத்த வரும் போது, அடித்துப் போட்டு விட்டு எருமை மாட்டில் ஏறி தப்பிப்பது, அருவியின் மீதிருந்து பெரிய பாறையை உருட்டி விட்டு பலரை கொள்வது என. அந்த ட்ரெய்லரில் குதிரையின் கண்களில் கூட ஒரு கோபம் இருக்கும். காட்சி எடுக்கும் முன்னர் அக்குதிரையை சீண்டுவாராம் கமல்.

image

பின் வந்த ‘ஆளவந்தானிலும்’ திரில்லுக்கு குறைவில்லை. சிறை கான்கிரீட்டை பல்லாலேயே கடித்து, சகோதரனின் தம்பி மனைவி மீது ஆக்ரோஷமாக துப்புவது. சகோதரனைக் கொல்ல துரத்துவது என. ‘ஆளவந்தான்’ படத்திற்கு சண்டைக் காட்சி அமைக்க வந்த மாஸ்டரை வைத்து தமிழ் சினிமா ஸ்டண்ட் யூனியன் ஆட்களுக்கு ஒரு பயிற்சிப்பட்டறையும் நடத்தினார் கமல்ஹாசன்.

பின் வந்த ‘பம்மல் கே சம்பந்தத்தில்’ ஸ்டண்ட் யூனியன் ஆளாகவே நடித்தார். ‘விருமாண்டியில்’ ஜல்லிக்கட்டில் காளையை அடக்கும் காட்சி, ஓடும் வண்டியில் இணைக்கப்பட்ட கட்டையில் புல் அப்ஸ் எடுப்பது, சுற்றி உடலை வளைப்பது, கொத்தாளத் தேவர் வீட்டில் அரிவாள் எரியும் காட்சி, நல்லம நாயக்கர் தோட்டத்து ஆட்களை கொல்ல வரும் காட்சி என பல சிறப்பான காட்சிகள் உண்டு. காரில் வரும் போதே ஜன்னல் வழியாக அரிவாள் வீசுவது என கமலின் டைரக்டர் டச் அதில் தெரியும். கிளைமாக்ஸான சிறைக் கலவரம் காட்சியும் மறக்க முடியாத சண்டைக் காட்சி.

image

‘தசாவதாரத்தில்’ நம்பி போடும் பழங்கால சண்டை, பிளட்சரின் வெறித்தன சண்டை, ஜப்பானிய கமலின் குங்பூ சண்டை என வித்தியாச சண்டை காட்சிகள். அதிலும் பிளட்சரின் ஆரம்ப சண்டைக் காட்சியும், சிதம்பர சண்டைக் காட்சியும் விறு விறுப்பாக இருக்கும். ‘விஸ்வரூபத்திலும்’ சண்டை காட்சிகள் வித்தியாசமாக அமைந்தன. சொல்லப்போனால் தன் சுயரூபத்தை காட்டும் ட்ரான்ஸ்பர்மேசன் சீன் தான் படத்தையே தாங்கியது எனலாம். கார் வரும் போது ஜன்னல் கண்ணாடியை சுட்டு, காரினுள் குதிப்பது, பாலைவனத்தில் நடக்கும் ஆயுத தாக்குதல்கள் எல்லாம் ரசிக்க வைக்கும்.

‘விக்ரம் (2022)’ படத்தில் குழந்தையை காப்பாற்றச் சென்று அந்த வீட்டில் போடும் ஒரு சண்டைக் காட்சி போதும். குழந்தைக்கு சத்தம் கேட்டு விடக்கூடாதே என்று போடும் சண்டையும், பின்னர் பால்பாட்டில் எடுக்க மீண்டும் வீட்டில் நுழையும் போது போடும் துப்பாக்கிச் சண்டையும் பார்வையாளனை சீட் நுனிக்கு கொண்டு வந்து விடும்.

கமல் தனக்கென சண்டைக் காட்சிகளில் ஒரு பாணியை வைத்துக் கொள்ளாமல் கேரக்டரின் குண நலனுக்கு ஏற்ப சண்டை போடுவதாலேயே இத்தனை வித சண்டைக்காட்சிகளை கொடுக்க முடிந்தது. மேலும் அவர் சேகரிக்கும் வித வித பொருட்களும் சண்டைக் காட்சிகளை உயிர்ப்புடன் வைக்கின்றன. ‘கலைஞனில்’ ஸ்டிலட்டோ, ‘விஸ்வரூபத்தில்’ மூன்றாய் பிரியும் கத்தி, ‘நாயகனில்’ நிஜ துப்பாக்கி என சண்டைக்காட்சிகளுக்கு வலு சேர்க்க முடிகிறது. ‘விஸ்வரூபம்’ படத்திற்கு அவர் சேகரித்து வைத்திருந்த ஆயுதங்கள் தான் ‘விக்ரமுக்கும்’ பயன்பட்டன.

அடுத்து வரும் கமலின் படங்களிலும் இது போன்ற ஆக்‌ஷன் காட்சிகளை எதிர்பார்க்கலாம்.

- முரளி கண்ணன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்