Published : 04,Nov 2022 08:23 PM

“மருதநாயகம், ஹேராம், விருமாண்டி..”.. அன்று தொட்டு இன்று வரை கமல்ஹாசனின் இயக்குநர் முகம்!!

Kamal-haasan-directed-movies

தமிழ் சினிமாவை தாண்டியும் சிறந்த நடிகராக கமல்ஹாசன் கொண்டாடப்பட்டு வந்தாலும், அவருக்குள் இருக்கும் இயக்குநர் முகம் எல்லாவற்றையும் காட்டிலும் லெஜெண்டரியானது என்பது குறித்து இந்தக் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25 ஆண்டுகளுக்கு முன்பு ‘மருதநாயகம்’ படத்தின் வெள்ளோட்ட காட்சித் தொகுப்பு ஒன்று பத்திரிக்கையாளர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. முடிந்தபின்னர் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அந்தப் படத்தின் இயக்குநர் கமல்ஹாசனுடன் உரையாடினார்கள். அப்போது குங்குமம் பத்திரிக்கையில் இருந்த மாலன் அவர்கள், “மற்றவர்களையும் நல்லா நடிக்க வச்சிருக்கீங்க அது முடியும். ஆனால் குதிரையும் அந்தக் காட்சிக்கு ஏற்ற சினத்தை கண்ணில் காட்டியதே எப்படி?” என்று கேட்டார். அந்தக் காட்சிக்கு முன் குதிரையை குச்சியால் சீண்டிக் கொண்டே இருந்தேன் என்றார் இயக்குநர் கமல்ஹாசன்.

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் மூலம் வெளிச்சம் பெற்ற, ரீ எண்டிரி கொடுத்த நடிகர்கள், நடிகைகள், திரைக்கதை வசனகர்த்தாக்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் உண்டு. பொதுவாக ஒரு இயக்குநர் மூலம் தான் பலரது திறமைகள் வெளிச்சம் பெறும். ஆனால் சமகால இயக்குநர்களுக்கு நிகராக ஏன் அவர்களை விட அதிகமாகவே பல திறமைகளை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர் கமல்ஹாசன். ஏனென்றால் கமல்ஹாசனிடம் இருப்பது நாயக மனம் அல்ல. இயக்குநர் மனம்.

image

90-களின் ஆரம்பத்தில் ‘குணா’, ‘தேவர் மகன்’ படங்களில் காகா ராதாகிருஷ்ணனுக்கும், ‘தேவர் மகன்’ படத்தில் ‘கள்ளபார்ட்’ நடராஜன் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார். பிரமாதப்படுத்தினார்கள். கிட்டத்தட்ட எல்லோரும் மறந்திருந்த நடிகர்களை ஞாபகம் வைத்து அழைத்து வந்தது. இன்னாருக்கு இன்ன ரோல் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கும் கமல்ஹாசனின் இயக்குநர் மனம். அதுபோலவே கிரேசி மோகனுக்கு கொடுத்த ‘அபூர்வ சகோதரர்கள்’ வசனகர்த்தா வாய்ப்பு, ‘மருதநாயகத்தில்’ பசுபதி, ‘தேவர் மகனில்’ வடிவேலுக்கு ஒரு குணசித்திர நடிகர் வாய்ப்பு, எஸ் என் பார்வதிக்கு கொடுத்த தொடர் வாய்ப்புகள், நாசருக்கு என தனியாக சிந்திப்பது, ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது என சொல்லிக் கொண்டே போகலாம்.

குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சோதனை, எட்டு ஒன்பது வயதில் இருந்து தங்கள் பதின் பருவத்தை கடக்கும் வரை அவர்கள் எதிர்கொள்ளும் கிரீடம் இழந்த இளவரசனின் மன உளைச்சல். அதிலும் ஆண் நடிகர்கள். பத்து வயதுக்கு மேல் அதிக ரோல்கள் கிடைக்காது. குரல் உடைந்து விடும். பெரிய வேடங்களுக்கு 18 வயது வரை பொறுத்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்வதும் சங்கடமாக இருக்கும். அந்தக் காலத்தில் ஒருவன் தன்னை எப்படி தகவமைத்துக் கொள்கிறான் எனபதே அவன் பிற்கால வெற்றிகளுக்கு அடித்தளமாய் அமையும்.

image

கமல்ஹாசனைப் பொறுத்த வரையில் அந்த வயது காலத்தில் தொடர்ந்து நடனப்பயிற்சி எடுத்து வந்தார். ஒரு நாட்டிய நாடகம் நடத்தும் எண்ணமும் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் தன் டீன் ஏஜை கடக்கும் போது அவருக்கு இயக்கத்தின் மீது தான் நாட்டம் அதிகமானது. அதை அவர் ஆரம்ப கால படங்களைப் பார்த்தால் அதை உணரலாம். கமல்ஹாசன் எழுபதுகளின் ஆரம்பத்தில் பணியாற்றிய படங்களைப் பார்த்தால் உதவி இயக்குநர், உதவி நடன ஆசிரியர் என்றே இருக்கும்.

‘நூற்றுக்கு நூறு’, ‘அன்னை வேளாங்கண்ணி’ படங்களில் உதவி இயக்குநர். ‘நூற்றுக்கு நூறு’ படத்தின் இயக்குநர் கே பாலசந்தரிடம் ஏற்பட்ட அறிமுகத்தால் ‘அரங்கேற்றம்’ படத்தில் பெயர் சொல்லும் படியான கேரக்டர். அடுத்து ‘சொல்லத்தான் நினைக்கிறேனில்’ நடிப்போடு சேர்த்து உதவி இயக்குநர் வேலையும். இந்த காலகட்டத்தில் கமலின் ஒரே குறிக்கோள் இயக்குநர் ஆவதாகத்தான் இருந்தது. இயக்குநர் ஆர்.சி. சக்தியின் முதல் படமான ‘உணர்ச்சிகளில்’ ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் கதை விவாதத்தில் இருந்து, வசனம், உதவி இயக்கம் வரை கமலின் பங்களிப்பு இருந்தது.

image

தொடந்து கே.பாலசந்தரின் படங்களான ‘அபூர்வ ராகங்கள்’, ‘மன்மத லீலை’, ‘மூன்று முடிச்சு’ என எல்லாப் படங்களிலும் அறிவிக்கப்படாத உதவி இயக்குநராகவே செயல்பட்டார் கமல்ஹாசன். தான் விரைவாக இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த கமல்ஹாசனுக்கு ப்ரேக் போட்டவர் பாலசந்தர் தான். நீ இயக்குநரா இருக்கும் போது ஹீரோ தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லாம உன்கிட்ட ஒரு மார்க்கெட் வேல்யூ இருக்கிற ஹீரோ இருந்தா நல்லது தானே? முதல்ல நடிச்சு உன்னை நிலை நிறுத்திக்கோ என்றார் கே.பி.

தொடர்ந்து நடிப்பில் முழுக்கவனம் செலுத்தினாலும் ஒரு இயக்குநராக என்னெவெல்லாம் என்ன திறமையெல்லாம் தேவையோ அதை எல்லாம் தேடித் தேடி சேர்த்துக் கொண்டே தான் இருந்தார் கமல்ஹாசன். பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்ற இயக்குநர்கள் துவங்கி ரா.கி. ரங்கராஜன், சுஜாதா போன்ற கதாயாசிரியர்கள் வரை அவர் நட்பிலேயே இருந்தார். அவர்களிடம் இருந்த கதைத்திறமையை உள்வாங்கிக் கொண்டார்.

image

ஒரு கம்பெனியின் சி.ஈ.ஓ. ஆக விரும்புபவர்கள் தாங்கள் இருக்கும் துறை மட்டுமல்லாது மற்ற துறைகளைப் பற்றியும் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். தன் துறையிலும் ஒரு சி.ஈ.ஓ. வைப் போலவே யோசித்து செயலாற்ற வேண்டும். அப்படித்தான் ஒரு இயக்குநர் மனநிலையிலேயே தான் கமல் திரைத்துறையில் செயல்பட்டு வந்தார். கதை, தன் கேரக்டர், உடன் நடிப்பவர்களின் பெர்பார்மன்ஸ், மற்ற எல்லா தொழில்நுட்ப விசயங்களிலும் ஒரு அறிவிக்கப்படாத இணை இயக்குநராகவே செயல்பட்டு வந்தார்.

‘சட்டம் என் கையில்’ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த இயக்குநர் டி.என். பாலுவின் அடுத்த படம் ‘சங்கர்லால்’. படப்பிடிப்பின் பாதியிலேயே அவர் இயற்கை எய்தி விட, மீதிப் படத்தை ஒளிப்பதிவாளர் என்.கே. விஸ்வநாதனுடன் சேர்ந்து இயக்கி முடித்தார். இதன் பின்னர் 80-களின் மத்தியில் கமல் விரைவாகவே ஒரு படத்தை இயக்கி முடிப்பார் என்று திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் கமல் நிறைய முன் தயாரிப்புகளை செய்து கொண்டு இருந்தாரே தவிர களத்தில் இறங்கவில்லை.

image

தன் பெயரில் வரும் முதல் படம் தமிழ் சினிமாவால் மறக்க முடியாத படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அதற்கான களம் ‘மருதநாயகம்’ படத்தில் அமைந்தது. ஆனால், சில காரணங்களால் படம் தடைப்பட்டது. தமிழில் பெரிய வெற்றி பெற்ற ‘அவ்வை சண்முகியை’ இந்திக்கு கொண்டு சென்றார். அங்கே படத்தை இயக்க வந்தவருக்கும் கமலுக்கும் ஏற்பட்ட கிரியேட்டிவ் டிபரன்ஸில் அவர் விலகிக் கொள்ள கமலே படத்தை இயக்கினார்.

கஷ்டமான மேக் அப், உடன் நடிக்க அம்ரீஷ் பூரி, ஓம் பூரி, தபூ என தேர்ந்த நடிப்பு பட்டாளம். நகைச்சுவையை திரையில் இருந்து பார்வையாளனுக்கு கடத்த வேண்டிய கட்டாயம். இவை அனைத்தையும் எளிதாக சமாளித்து படத்தை வெற்றியாக்கினார். அடுத்து கமல்ஹாசன் இயக்கிய படம் ‘ஹேராம்’. மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. டாக்கு-பிக்சன் ஜானரில் தமிழ்நாட்டின் முக்கிய படமாக இன்றளவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு ரெபரன்ஸாக இருக்கக் கூடிய படமாகவும் இருக்கும். அதற்கடுத்து இயக்கிய ‘விருமாண்டி’ திரைப்படமும் திரைப்பட ஆர்வலர்களிடமும் தற்போதைய இளைய சமுதாயத்திடமும் பேசு பொருளாக இருந்து வருகிறது.

image

இருபது ஆண்டுகள் ஆகப்போகும் வேளையிலும் அப்பட கதாபாத்திரங்கள் பேசு பொருளாகவே இருந்து வருகிறது. அதன் பின்னர் கமல் இயக்கிய ‘விஸ்வரூபம்’ திரைப்படமும் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஒரு சேர திருப்திப்படுத்தியது. யோசித்துப் பார்த்தால் மூன்று திரைப்படங்கள் ‘ஹேராம்’, ‘விருமாண்டி’, ‘விஸ்வரூபம்’ இதற்கு இணையான தரத்தில் தமிழ் சினிமாவில் மூன்று படங்களை கொடுத்த இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஆனால் இந்தப் படங்களை இயக்க கமல் எடுத்துக் கொண்ட் முன் தயாரிப்பு பெரிது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் சிறுகச் சிறுக சேமித்து ஒரு வீடு வாங்குவதைப் போல அவர் தன் திரைப்பயணத்தில் கற்றவற்றைக் கொண்டு இந்தப் படங்களை இயக்கினார். இனி எதுவும் கற்றுக்கொள்ள தேவையில்லை என்ற போதிலும், சில மாதங்கள் முன்பு அமெரிக்கா சென்று திரைக்கதை பயிற்சிப்பட்டறையிலும் கலந்து கொண்டு வந்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் பெற்ற சமூக அனுபவம், அரசியல் அனுபவத்தையும் கொண்டு மேலும் சில தமிழ் சினிமா மறக்க இயலாத படங்களை கமல் இயக்க வேண்டும்.

- முரளி கண்ணன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்