Published : 04,Nov 2022 08:11 AM

கொலை முயற்சி: துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இம்ரான் கான் -நடந்தது என்ன?

Imran-Khan-shot-at-injured-during-long-march-what-happened

பாகிஸ்தானில் பேரணி நடத்திய முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான் (70) கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகினார். அவரது தலைமையிலான கூட்டணியில் இருந்து முக்கிய கட்சி விலகி எதிர்கட்சியுடன் இணைந்ததால், நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் இம்ரான் கான். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார். ஷெரீப் பிரதமராகப் பதவியேற்ற நாள் முதலே அவர் இம்ரான் கானுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார். இதனிடையே தன்னைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் இம்ரான் கான் கூறிவந்தார்.

image

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வந்தார். இந்த பேரணி நேற்று (வியாழக்கிழமை) பஞ்சாப் மாகாணத்தின் வஜிராபாத் வந்தது. அவரது கட்சியின் முன்னணி தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்றனர். இம்ரான் கான் ஒரு கன்டெய்னர் லாரி மீது ஏறி நின்று உரையாற்றிக் கொண்டிருக்கையில் தொண்டர்கள் கூட்டத்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர், துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இம்ரான் கானின் இரண்டு கால்களிலும் 3 குண்டுகள் பாய்ந்தன. மர்ம நபர்கள் சுட்ட அடுத்தடுத்த குண்டுகள் தொண்டர்கள் மீதும் பாய்ந்தன. இதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த இம்ரான் கான் உடனடியாக லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தற்போது இம்ரான் கான் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அபாய கட்டத்தை கடந்துவிட்டாலும் கூட அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

image

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நவீத் முகம்மது பஷீர் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே அவரை கொல்ல, தான் முடிவெடுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட மற்றொரு நபர் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இம்ரான் கான் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டில் பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும்   தெரிவித்துள்ளனர். இம்ரான் கானை கொல்ல வேண்டும் எனும் நோக்கில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது என பி.டி.ஐ கட்சி கண்டித்துள்ளது.

image

இம்ரான் கான் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இம்ரான் கான் மீதான துப்பாக்கிச் சூட்டை கடுமையாக கண்டிக்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்கும்படி உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன். இம்ரான் கான் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிப் ஆல்வி கூறுகையில், ''வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாது. பாகிஸ்தான் அரசியலில் வன்முறைக்கு இடம் இல்லை" என தெரிவித்துள்ளார்.

இதே சம்பவத்தைப் போல், கடந்த 2017-ல் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: விமானத்திற்குள் சிகரெட்.. தீப்பற்றிக்கொண்ட டாய்லெட்! பயணியின் செயலால் நடுவானில் பரபரப்பு

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்