Published : 03,Nov 2022 05:33 PM

தொங்கு பாலம் விபத்திற்கு பிறகு செல்வாக்கை நிரூபிக்குமா பாஜக; குஜராத் தேர்தல்களம் ஓர் அலசல்

Gujarat-Assembly-Elections-2022-BJP-AAP-and-congress-in-three-way-contest-why-is-it-crucial-for-them

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாநில சட்டமன்ற தேர்தலை காட்டிலும் இந்தத் தேர்தல் அரசியல் களத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் தான். ஏனென்றால் குஜராத் மாநில முதல்வராக அடுத்தடுத்து வெற்றியை பெற்ற பிறகுதான் பிரதமராகும் வாய்ப்பு நரேந்திர மோடிக்கு கிடைத்தது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி மற்றும் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய காங்கிரஸ், புதிதாக வளர்ந்து வரும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மூன்று கட்சிகள் இடையே நேரடி போட்டி என்பதால் இது ஒரு மும்முனைப்போட்டியாக பார்க்கப்படுகிறது.

தேர்தல்களம் என்பது தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு பல மாதங்கள் முன்பாகவே சூடு பிடிக்க தொடங்கி விட்டது. அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக சென்றது குஜராத்துக்கு தான். அங்கு தன்னுடைய வெற்றியை பேரணியாக நடத்தி கொண்டாடி மகிழ்ந்தார். அதே நேரத்தில் குஜராத் மாடல் வளர்ச்சியை மையமாக வைத்து தான் மற்ற மாநிலங்களில் பா.ஜ.க. தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி வருகிறது. இதனால் இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் வெற்றி பெற்றதாக வேண்டும் என்பது கட்டாயம். இந்த வெற்றியின் தாக்கம் அப்படியே 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

image

இன்று தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை தேர்தல் தொடர்பாக காந்திநகரில் அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதேபோன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் குஜராத் தேர்தலுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். மிக முக்கியமாக 500 ரூபாய்க்கு எல்.பி.ஜி.சிலிண்டர் வழங்கப்படும். 300 யூனிட் வரை இலவச மின்சாரம். விவசாயிகள் கடன் தள்ளுபடி, 3,000 அரசு ஆங்கில கல்வி பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்.

அதே போன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால், குஜராத் மக்கள் இந்த முறை ஒரு பெரிய மாற்றத்திற்கு தயாராக இருப்பதாகவும், நாங்கள் நிச்சயமாக இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பெயரும் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 2017 ஆம் வருட சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 49 சதவீதம் வாக்குகளை பெற்று 99 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி 41.4% வாக்குகளை பெற்று 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இத்தகைய நேரடிப் போட்டி நிலவி வந்த சூழலில், கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடிக்கடி குஜராத் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

image

காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்த குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த அகமது படேல் சென்ற வருடம் காலமானது மற்றும் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தது ஆகியவை காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடிக்கடி குஜராத் பயணம் செய்து கட்சிக்கு வலுசேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குஜராத் மாநில முதல்வராக இருந்த விஜய் ரூபாணி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக 2021-ல் பூபேந்திர படேல் நியமிக்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சி தனது பலவீனங்களை சரிகட்ட எடுத்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் குஜராத் மாநிலம் மோர்பியில் புனரமைக்கப்பட்ட தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குஜராத் மாநில அரசியலில் பா.ஜ.க.வுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

அதே நேரத்தில் தேர்தல் வாக்குறுதிகளாக பா.ஜ.க.என்னென்ன விஷயங்களை அறிவிக்க இருக்கிறது. மற்ற கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் எவை என்பவையும் தேர்தல் முடிவுகளுக்கு மிக முக்கிய விஷயங்களாக இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்தாலும், தொங்கு பால விபத்துக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி பா.ஜ.க. தனது செல்வாக்கை நிரூபிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- விக்னேஷ்முத்து

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்