Published : 02,Nov 2022 08:46 AM

ஆன்மிக சுற்றுலா மூலம் ரயில்வே துறைக்கு கிடைத்த வருமானம் எத்தனை கோடி தெரியுமா?

Do-you-know-how-much-revenue-the-railway-sector-earns-from-spiritual-tourism-Southern-Railway-Information

ஆன்மிக சுற்றுலா மூலம் ரயில்வே துறைக்கு கிடைத்த வருமானம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பண்பாடு, பாரம்பரிய மிக்க வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா தலங்களை கண்டு களிக்க இந்திய ரயில்வே சார்பில் ‘பாரத் கவுரவ்’ திட்டத்தின் மூலம் ஆன்மிக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது.

image

அனுபவம் வாய்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் இதுவரை ஆறு ஆன்மிக சுற்றுலா ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆன்மிக சுற்றுலா ரயில் மதுரை கூடல் நகர் - பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா ரயில் தெலுங்கானா மௌலாளி, ஜெய்பூர், ஆக்ரா, அமிர்தசரஸ், கோவா போன்ற சுற்றுலா தளங்களை இணைத்து இயக்கப்படுகிறது.

image

இந்த கூடல் நகர் - அமிர்தசரஸ் - கூடல் நகர் சுற்றுவட்ட சுற்றுலா ரயில், கூடல் நகரில் இருந்து நவம்பர் 3 ஆம் தேதி இரவு 07.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், பாலக்காடு, போத்தனூர், சேலம், காட்பாடி வழியாக சென்று நவம்பர் 6 ஆம் தேதியன்று மௌலாளி, நவம்பர் 8 ஆம் தேதி ஜெய்ப்பூர், நவம்பர் 9 ஆம் தேதி ஆக்ரா, நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி, நவம்பர் 11 அன்று அமிர்தசரஸ், நவம்பர் 13 அன்று கோவா போன்ற சுற்றுலா தளங்களை இணைக்கிறது. பின்பு மங்களூர், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியாக நவம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு கூடல் நகர் வந்தடையும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

இதுவரை இயக்கிய ஆறு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூபாய் 6.3 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் நாள்களில் இந்த தொகை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்