Published : 01,Nov 2022 05:29 PM

மோசமான ஃபார்மால் சோதிக்கும் கே.எல்.ராகுல்.. இருவரை தவிர மற்றவர்கள் நிலையும் சோகம்தான்!

T20-WC-2022-Rahul-Dravid-Said-On-KL-Rahul-Poor-Run-So-Far

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை சோதித்து வரும் கே.எல்.ராகுலின் மோசமான ஃபார்ம் குறித்து ராகுல் டிராவிட் தெரிவித்துள்ள கருத்து குறித்தும், மற்ற வீரர்களின் நிலை குறித்து இந்த கட்டுரைத் தொகுப்பில் பார்க்கலாம். 

மூன்று போட்டிகளில் இந்திய அணியின் நிலவரம்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் சுவாரஸ்யமானதாக இருந்து வருகிறது. இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் பாகிஸ்தான், நெதர்லாந்து, தென்னாப்ரிக்க அணிகளை எதிர்கொண்டது. இதில் பாகிஸ்தான் அணி உடனான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. நூலிழையில் தோல்வியில் இருந்து தப்பியது என்றே சொல்லலாம். பின்னர் நெதர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதேபோல், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியும் இறுதிவரை பரபரப்பாக சென்று கடைசி ஓவரின் 4வது பந்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

image

இந்திய அணியை சோதிக்கும் கே.எல்.ராகுலின் ஃபார்ம்!

இந்த மூன்று போட்டியிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தும் சொதப்பிய வீரராக தொடக்க வீரர் கே.எல்.ராகுல் உள்ளார். மூன்று போட்டிகளிலும் முறையே 4, 9, 9 என மொத்தமே 22 ரன்கள்தான் எடுத்துள்ளார் என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம். மற்ற வீரர்கள் எல்லோரும் ஏதேனும் ஒன்று, இரண்டு போட்டிகளில் ரன்கள் அடித்து அணிக்கு உதவியுள்ள நிலையில், கே.எல்.ராகுலால் அணிக்கு எவ்வித பயனும் இதுவரை விளையவில்லை. இதனால், ரசிகர்கள் பலரும் அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு, ரிஷப் பண்ட் போன்ற வேகமாக ரன் குவிக்கும் வேறு வீரர் யாரையாவது தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

image

ராகுல் டிராவிட் சொன்னது என்ன?

கே.எல்.ராகுலில் ஃபார்ம் குறித்து செய்தியாளர்களிடம் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “அவர் மிகவும் சிறப்பான வீரர். அவர் தன்னுடைய திறமையை பல முறை நிரூபித்துள்ளார். டி20 போட்டிகளில் இதுபோன்று திடீரென ஃபார்ம் பிரச்னை வருவது வழக்கம்தான். ஆனால், டாப் ஆர்டர்களில் வருவது சிக்கலானதே. இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் சவாலான ஒன்று. கே.எல்.ராகுல் தனது பயிற்சி ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார் ஆகியோருக்கு எதிராகவே சிறப்பாகவே விளையாடினார். அந்தப் போட்டியில் அறுபது, எழுபது ரன்கள் எடுத்திருந்தார். அந்தவகையில் அடுத்து வரும் போட்டிகளில் நிச்சயம் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன். அவரது திறமை நமக்கு தெரியும். நிலைமைக்கு தகுந்தவாறு விளையாடுவதில் அவர் சிறப்பானவர்" என்றார்.

image

வீரர்களுடனான உரையாடல் குறித்து டிராவிட் பேசுகையில், “வீரர்களுடன் நிறையவே உரையாடுகிறோம். எல்லாவற்றையும் வெளியே சொல்வது கடினமானதாகும். ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு தருணத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தி அணிக்கு உதவுவார்கள். கே.எல்.ராகுலுக்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் உள்ளது என்பது அவருக்கு தெரியும்” என்றார்.

மற்ற வீரர்களின் நிலை எப்படி?

இந்திய அணியைப் பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் (15, 51, 68) மற்றும் விராட் கோலி (82, 62, 2) மட்டுமே முழு ஃபார்மில் உள்ளதாக தெரிகிறது. இருவரும் மூன்று போட்டியில் இரண்டு அரைசதம் அடித்துள்ளனர். ரோகித் சர்மா (53, 15, 4) ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார். மற்ற இரண்டு போட்டிகளில் சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்தார். ஆல் ரவுண்டராக ஜொலித்து வந்த ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 40 ரன்கள் எடுத்த போதிலும் தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்னில் நடையைக் கட்டினார். கடைசி நேர ஹிட்டராக அசத்துவார் என நினைத்த தினேஷ் கார்த்தி விளையாடிய இரண்டு போட்டிகளில் முறையே 1, 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

image

இந்திய அணி முதல் இரண்டு இடங்களை குரூப் 12 சுற்றில் பிடிக்க வேண்டுமெனில் அடுத்து வரும் ஆட்டங்களில் பேட்டிங் வரிசை மிகவும் பலமானதாக அமையவேண்டியது கட்டாயமாகியுள்ளது. ஏனெனில் ஒன்று, இரண்டு வீரர்களை நம்பி மட்டுமே அணியை கொண்டு செல்ல முடியாது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்