அகஸ்தியர் சுற்றுச் சூழல் செயற்கைக்கோள்: இஸ்ரோ செல்லும் அரசுப் பள்ளி மாணவர்

அகஸ்தியர் சுற்றுச் சூழல் செயற்கைக்கோள்: இஸ்ரோ செல்லும் அரசுப் பள்ளி மாணவர்
அகஸ்தியர் சுற்றுச் சூழல் செயற்கைக்கோள்: இஸ்ரோ செல்லும் அரசுப் பள்ளி மாணவர்

அகஸ்தியர் சுற்றுச் சூழல் செயற்கைக்கோள் தயாரிக்க இஸ்ரோ செல்லும் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் சஞ்சய் வேலா. இவர், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு 75 மாணவர்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ வேண்டுமென பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதற்காக 26 மாவட்டங்களைச் சேர்ந்த 75 மாணவர்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் அகஸ்தியர் சுற்றுச் சூழல் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவ உள்ளனர். இதையடுத்து ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் மாணவர் விண்ணப்பித்திருந்த நிலையில், 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பத்மபூஷன் டாக்டர் சிவதாணு பிள்ளை, செயற்கைக்கோள் குறித்து பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் இணைய வழி மூலமாக மாணவர்களுக்கு தொடர்ந்து நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை தேர்வு செய்துள்ளனர்.

இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சஞ்சய் வேலா பெங்களூரில் உள்ள இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ நிலையங்களில் மாணவர்களும் ஆசிரியர்களுடன் சேர்ந்து பயிற்சியில் பங்கேற்க நவம்பர் 2ஆம் தேதி செல்ல உள்ளார். இதையடுத்து ஆண்டிமடம் பகுதியில் உள்ள பலரும் அரசுப் பள்ளி மாணவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அரசு பள்ளி மாணவன் சஞ்சய் வேலா கூறிய போது "எனது அக்கா மோனிஷா முயற்சியால் இதில் கலந்து கொண்டு இரண்டாம் கட்ட தேர்விலும் வெற்றி பெற்று இஸ்ரோ செல்ல உள்ளேன். இஸ்ரோவிலும் நான் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும். இஸ்ரோ விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பது எனது லட்சியம். போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் எனக்கு யாரேனும் உதவிகள் செய்தால் நிச்சயமாக நான் அதை செய்து காண்பிப்பேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com