Published : 30,Oct 2022 07:04 PM

``தமிழக காவல்துறையா அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா?”- பாஜக அண்ணாமலை

BJP-Annamalai-says-Tamil-police-department-to-protect-intellectuals

நேற்றைய தினம் தமிழ்நாடு காவல்துறை சார்பில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த விசாரணையை பாஜக தலைவர் அண்ணாமலை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றும், எந்த தாமதமுமின்றி மாநில அரசு, மத்திய அரசுக்கு முறையாக அறிக்கை அனுப்பி வருகிறது என்றும் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகள் பல முன் வைக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தமிழக காவல்துறை தலைமையகத்திலிருந்து ஒரு பத்திரிகை செய்தி வெளியானது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பதில் அளித்திருக்கிறார். அந்த பதில் அவர், “தமிழக காவல்துறையா அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா? டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சொல்ல விரும்புகிறேன்... நீங்கள் ஒரு காவல் அதிகாரி தானே தவிர தங்களை ஒரு சர்வாதிகாரியாக நினைத்துக்கொள்ள வேண்டாம்”என்று குறிப்பிட்டிருக்கிறார்.

image

அண்ணாமலையின் அந்தப் பதிவில் உள்ள முக்கிய விவரங்கள் இங்கே: “நான் பல கருத்துக்களை கூறி விசாரணையின் போக்கை திசைதிருப்ப முயற்சிப்பதாக காவல்துறை தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி தொடங்குகிறது. ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்கிற முறையில் ஆளும் அரசை கேள்வி எழுப்புவதும் மக்களிடம் உண்மையை கொண்டு சேர்ப்பதும் எங்களது பொறுப்பாக உணருகிறோம். அதை கூடாது என்பதற்கு காவல்துறைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு சொல்ல விரும்புகிறேன்... நீங்கள் ஒரு காவல் அதிகாரி தானே தவிர தங்களை ஒரு சர்வாதிகாரியாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.

விசாரணையின் போக்கை திசை திருப்புவதாக நான் கருத்துக்கள் சொன்னதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி நான் சொன்ன கருத்துக்கள் பின்வருமாறு:

1) 23ஆம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி என்ற செய்தி வந்தது. 23ஆம் தேதி மதியம் இதை பற்றி பதிவிட்டிருந்த நான் காவல்துறை உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கியதை பாராட்டினேன். மற்றும் இந்த வெடி விபத்தில்" இருக்கும் மர்மத்தை காவல்துறை விலக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.

image

2) 23ஆம் தேதி இரவு, நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை, இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ISIS என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?

3) சுமார் 24 மணி நேரம் காத்திருந்த பின்னரும் காவல்துறையிடமிருந்தோ தமிழக அரசிடம் இருந்தோ எவ்வித தகவலும் வராததால், 24ஆம் தேதி இரவு, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 36 மணி நேரம் ஆன பின்பும் தமிழக முதல்வர் இதை பற்றி பேச மறுப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தேன்.

இன்றுடன் இந்த சம்பவம் முடிந்து 7 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை தமிழக முதல்வர் மெளனம் காப்பது அனைவரும் அறிந்ததே. இந்த துறைக்கு சற்றும் தொடர்பே இல்லாத அமைச்சரொருவர், கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்த இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்?

image

4) தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை மௌன நிலையில் இருப்பதால், ஒரு ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக பத்திரிகையாளர் வாயிலாக சில கேள்விகளை முன் வைத்தோம். அந்த கேள்விகள் பின்வருமாறு 6 தனிப்படை அமைத்து விசாரித்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் காவல்துறை அடுத்தகட்ட உண்மைகளை சொல்வதற்கு தயங்குவது ஏன்? இதுவரை இது ஒரு தீவிரவாத சதி செயல் என்று சொல்ல மறுப்பது ஏன்?

image

அக்டோபர் 21ஆம் தேதி ஜமேஷா முபீன் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இதை காவல்துறை மறுக்க முடியுமா? இறந்த ஜமேஷா முபீன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டினோம். காவல்துறை இதை மறுக்குமா?

  • கைது செய்யப்பட்ட 5 பேர் மீது UAPA சட்டம் பாயாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்.
  • எதிர்க்கட்சியினர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பலியான வழக்குகளுக்கு கூட வழக்கு பிரிவுகளுடன் கோபாலபுர குடும்ப தொலைக்காட்சிகளின் மூலமாக செய்திகள் வெளியிடும் நீங்கள், ஒரு தீவிரவாத சம்பவத்தில் கைதான 5 நபர்கள் மீது எந்த வழக்கு பிரிவின் கீழ் கைதாகியுள்ளார்கள் என்பதனை குறிப்பிடாமல் பத்திரிகை செய்தி வெளியிட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினோம்.

(இந்த கேள்வி எழுப்பி சரியாக 3 மணி நேரத்திற்கு பின்பு கோவை மாவட்ட ஆணையர் செய்தியாளர்களை சந்தித்து புலன் விசாரணையில் பதியப்பட்ட வழக்கின் பிரிவுகள் மாற்றப்பட்டு UAPA சட்டம் போடப்பட்டதாக கூறினார். இதிலிருந்து தெரியவில்லையா தங்கள் தலைமையிலான காவல்துறை எப்படி செயல்படுகிறது என்று.)

image

தமிழக உளவுத்துறையின் செயல்பாடுகள் பற்றியும் ஒருசாராரை மட்டும் அரவணைத்து செயல்படும் உளவுத்துறையின் நோக்கத்தை பற்றியும் கேள்வி எழுப்பினேன்.

ஈரோடு மற்றும் சேலத்தில், பாரிஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதல் போல் நடத்திட திட்டம் தீட்டியர்வர்களை கமுக்கமாக கைது செய்து இதைப் பற்றி செய்திகள் வெளியிடாத அரசின் உள்நோக்கத்தை கேள்வி எழுப்பினேன்” என்றார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்