
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோடிக்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த அவருக்கு, அதே ஊரை சேர்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மதுபோதையில் இருந்த சிலர் அவரை சரமாரியாக தாக்கியதில் ராஜசேகர் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டுச்செல்லப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குடியாத்தம் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.