Published : 27,Oct 2022 07:53 PM
சர்ச்சையை ஏற்படுத்திய திமுக நிர்வாகியின் பேச்சு... கண்டனம் தெரிவித்த குஷ்பு, கனிமொழி!

சென்னை ஆர்.கே நகர் மேற்குப் பகுதியில் நடைபெற்ற திமுகவின் பொதுக்கூட்டத்தில் மேடையில் பேசிய திமுக நிர்வாகி, பாஜகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராமன், கவுதமி குறித்து ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, குஷ்பு தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும், திமுக எம்.பி கனிமொழியை கேட் செய்து டிவிட்டரில் பதிவு செய்தார். ”ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்களை வளர்த்த விதத்தையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இத்தகைய ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்களாக கூறிக்கொள்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது போன்ற கண்ணியமற்ற பேச்சுகள் திமுகவிற்கு அவப்பெயரையே சம்பாதித்து தரும். தலைமை இதனை கண்டிக்க வேண்டும். மேடையேறி பேசுவோருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். சமூகநீதி பெண்ணியம் இரண்டிற்கும் களங்கம் விளைவிக்கும் பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும்
— DirectorNaveen (@NaveenFilmmaker) October 27, 2022
pic.twitter.com/l0ORzFno25
இது பதிலளித்த திமுக எம்.பி கனிமொழி, ‘’ இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண்ணாகவும், ஒரு மனிதனாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்று யார் செய்தாலும், அவர்கள் எந்த கட்சியை சேர்ந்திருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த சம்பவத்திற்கு எங்கள் தலைவர் ஸ்டாலின் மற்றும் அறிவாலயம் சார்ப்பாக நான் மன்னிப்பு கோருகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
I apologise as a woman and human being for what was said.This can never be tolerated irrespective of whoever did it,of the space it was said or party they adhere to.And I’m able to openly apologise for this because my leader @mkstalin and my party @arivalayam don’t condone this. https://t.co/FyVo4KvU9A
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 27, 2022
இதையும் படியுங்கள் - கொஞ்சம் ஓவரா போன ”Fire Haircut” - இளைஞருக்கு நேர்ந்தது என்ன?
சில வாரங்களுக்கு முன்பு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘ஓசி பஸ்ஸில் தானே போகிறீர்கள்?‘ என பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சுக்கு அனைத்து தரப்பிலும் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘’பல முனைகளிலிருந்தும் வரும் தாக்குதலுக்கு பதில் கூற கடமைப்பட்டுள்ளேன். மத்தளத்தில் இரு பக்கமும் அடி என்பதைபோல் எனது நிலைமை இருக்கிறது. இந்த சூழலில் என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது? திமுகவினர் புதிய பிரச்னையை உருவாகியிருக்கக் கூடாது என்ற நினைப்போடு தான் தினமும் கண் விழிக்கிறேன். சில சமயங்களில் என்னை தூங்கவிடாமலும் செய்கிறது” என வருத்தம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நான் சகஜமாக பேசியதை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்றும், தனது பேச்சால் உண்மையாகவே யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்துவதாகவும் அமைச்சர் பொன்முடி கூறியதும் குறிப்பிடத்தக்கது.