தேவர் தங்கக்கவச விவகாரம்: இபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு ட்விஸ்ட் வைத்த நீதிமன்றத் தீர்ப்பு!

தேவர் தங்கக்கவச விவகாரம்: இபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு ட்விஸ்ட் வைத்த நீதிமன்றத் தீர்ப்பு!
தேவர் தங்கக்கவச விவகாரம்: இபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு ட்விஸ்ட் வைத்த நீதிமன்றத் தீர்ப்பு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச்செல்லும் அதிகாரத்தை வழங்கக்கோரி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் (எடப்பாடி தரப்பு) தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "விடுதலைப் போராட்ட வீரரான முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு 2014ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்கக் கவசம் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் அதிமுக மற்றும் பசும்பொன் தேவர் நினைவாலயம் ஆகியோரின் பெயரில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளை முன்னிட்டு 3 தினங்களுக்கு முன்பாக தங்கக் கவசத்தினை வங்கியில் இருந்து எடுத்துச்சென்று பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவித்து, மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம்.

இதற்காக அதிமுக பொருளாளரும் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலய பொறுப்பாளர்களும் வங்கியில் கையெழுத்திட்டு தங்கக் கவசத்தினை பெற்று செல்வார்கள். தற்போது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தினை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய உத்தரவு செல்லும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, ’’அதிமுக பொருளாளராக உள்ள எனக்கே தங்கக் கவசத்தினை வங்கியில் இருந்து பெறுவதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால், வங்கி அதிகாரிகள் தங்கக் கவசத்தினை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, 2022 அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு தங்கக் கவசத்தினை எடுத்துச்செல்ல சட்டபூர்வமாக இடைக்கால உத்தரவு வழங்கவும், வங்கிக்கணக்கை அதிமுக சார்பாக கையாளும் அதிகாரத்தை வழங்கவும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது வங்கி தரப்பிலும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயம் தரப்பிலும் நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படுவதாக தெரிவித்திருந்தனர். வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை இணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு தங்கக் கவசத்தை ஒப்படைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில், “அதிமுக கட்சி விதிமுறைகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கும்போது தற்காலிக பொருளாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் நியமனம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. தங்கக் கவசத்தை எங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், “அதிமுகவில் 2,190 உறுப்பினர்கள் இணைந்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்துள்ளனர். உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தற்காலிக பொதுச்செயலாளர் தேர்வு செல்லும் எனக் கூறியுள்ளது. மேலும் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.ஸ் தரப்பு தங்கக் கவசத்தை பெற எந்த அதிகாரமும் இல்லை. எனவே, சட்டத்தின் படி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசத்தை ராமநாதபுர மாவட்ட வருவாய்த்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளதோடு, உட்கட்சி பிரச்னையில் நீதிமன்றம் தலையிட இயலாது என்றும், அதிமுக சார்பில் வழங்கிய தங்கக் கவசத்தை ராமநாதபுரம் DRO வங்கியில் இருந்து எடுத்துச்சென்று அணிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com