கோவை வெடிவிபத்து வழக்கு விசாரணை யார் வசம் உள்ளது? மாநகர காவல் ஆணையர் பதில்!

கோவை வெடிவிபத்து வழக்கு விசாரணை யார் வசம் உள்ளது? மாநகர காவல் ஆணையர் பதில்!
கோவை வெடிவிபத்து வழக்கு விசாரணை யார் வசம் உள்ளது? மாநகர காவல் ஆணையர் பதில்!

கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் விபத்துக்குள்ளாகி சிலிண்டர் வெடி விபத்தில் ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

அதற்கு பிறகு காவல்துறையின் தொடர் புலன் விசாரணையில் உக்கடம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கனமான பொருட்களை ஜமேசா முபினுடன் சேர்ந்து 5 பேர் எடுத்துச் செல்லும் காட்சிகள் இருந்தது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நடத்திய விசாரணையில் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். இதில் முகமது தல்கா என்பவர், தடைசெய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் தம்பி நவாப் கானின் மகன்.

இந்நிலையில் இறந்த ஜமேசா முபினுக்கு கார் கொடுத்த விவகாரத்தில் முகமது தல்கா கைது செய்யப்பட்டுள்ளார். நவாப் கான் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக சிறையில் இருப்பவர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே என் ஐ ஏ விசாரணை வளையத்திற்குள் இருந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பின்னனி குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

அதன்படி மாநகர் முழுவதும் சி ஆர் பி எஃப் உதவியுன் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த மாநகர காவல் துறை, வாகன சோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளது. கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபீன் பலியான நிலையில் ஜமேஷா முபீன் தற்செயலான விபத்தில் இறந்தாரா அல்லது சதி வேலைக்கு முயன்ற நிலையில் இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் ஜமேஷா முபீன் பயணித்த காரில் ஆணி, பால்ஸ் குண்டுகள், இரண்டு சிலிண்டர் தடயங்கள் கிடைக்கப்பெற்றன. இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான வேதியியல் மூலப்பொருட்கள் அவரது இல்லத்திலும் கைபற்றப்பட்டன.

சதி செயலுக்காக முயன்றாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு சந்தேகம் வழுத்தன. இதனால் உக்கடம், ஜி எம் நகரில் தனிப்படை போலிஸார் தீவிர விசாரணை நடத்தியிருக்கின்றனர். கார் தந்து உதவிய நபர் யார், முபின் பின்னணி என்ன, முபின் ஏதேனும் அமைப்பில் இருக்கின்றாரா என்ற விசாரணை நடந்துவருகின்றன.

இந்த நிலையில் உக்கடம், டவுன் ஹால். ரயில் நிலையம் பகுதிகளில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் மாநகர காவல் துறையினர் சுமார் 2000 பேர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிய ஏந்திய சி ஆ பி எஃப் வீரர்களும் இரண்டு குழுக்களாக பிரிந்து பாதுகாப்பு பணியில் இணைந்துள்ளனர். கலவரத் தடுப்பு வஜ்ரா வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகளும் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுகின்ற இடங்களில் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடையே பேசுகையில், “கோவையில் கார் வெடி விபத்து தொடர்பான வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. கைது நடவடிக்கைகள் ஆய்வு மற்றும் புலன் விசாரணை என அனைத்தும் கோவை மாநகர காவல் துறை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் இருந்து வந்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கோவை வந்துள்ள நிலையில் வெடி விபத்து குறித்த பொதுவான தகவல்களை சேகரித்து வருகின்றனர். கோவை உக்கடம் கார் வெடித்தது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது வரை கோவை காவல்துறை வசமே உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com