Published : 25,Oct 2022 04:07 PM

ரயில் பயணத்தில் திடீர் பிரசவ வலி- கர்ப்பிணிக்கு உதவிய பெண் காவலருக்கு குவியும் பாராட்டுகள்

baby-boy-was-born-at-Arakkonam-railway-station

சென்னை விரைவு ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தநிலையில், பிரசவத்திற்கு உதவிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி சாந்தினி மற்றும் அவரது கணவர் அஸ்வின் குமார் ஆகியோர் பெங்களூருவில் இருந்து சென்னை செல்லக்கூடிய விரைவு ரயிலில் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென்று சாந்தினிக்கு பிரசவ வலியானது ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து டிக்கெட் பரிசோதகர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இந்த தகவல் அடிப்படையில் அங்கு பணியில் இருந்த காவலர் பரமேஸ்வரி என்பவர், சாந்தினியை அங்கிருந்து மீட்டு அருகில் இருந்த பயணிகள் தங்கும் அறையில் அமரவைத்திருக்கிறார். இந்நிலையில் திடீரென்று அங்கேயே அவருக்கு பிரசவம் ஆனது. இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

image

உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் குழந்தையும் தாயும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் பிரசவத்திற்கு உதவிய தலைமை காவலர் பரமேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்