
கொட்டில்பாடு மீனவ கிராமத்தில், கொடுத்த கடனை திரும்பக் கேட்டவரை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் உட்பட 10 பேர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். அரசு பேருந்து ஓட்டுநரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை தேவதாஸ் தனது வீட்டின் முன்பு மீன் வலைகளை பின்னிக் கொண்டிருந்தார். அப்போது தனது மனைவியுடன் அங்கு வந்த சசிகுமார், தேவதாஸை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதை கண்ட தேவதாஸின் மனைவி தடுக்க வந்த நிலையில், இரு தரப்பைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கட்டிப்புரண்டு மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினரின் புகாரின் பேரில் குளச்சல் போலீசார், சசிகுமார், தேவதாஸ் உட்பட 10-பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் சசிகுமார் மற்றும் தேவதாஸ் குடும்பத்தினர் கட்டிப்புரண்டு தாக்கிக் கொள்ளும் பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.