முதல் போட்டியிலேயே மரண பயம் காட்டிய நியூசிலாந்து - சாம்பியனான ஆஸி.க்கு என்னதான் ஆச்சு?

முதல் போட்டியிலேயே மரண பயம் காட்டிய நியூசிலாந்து - சாம்பியனான ஆஸி.க்கு என்னதான் ஆச்சு?
முதல் போட்டியிலேயே மரண பயம் காட்டிய நியூசிலாந்து - சாம்பியனான ஆஸி.க்கு என்னதான் ஆச்சு?

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் நியூசிலாந்து அணி பட்டய கிளப்பிய நிலையில், ஆஸ்திரேலிய அணி மொத்தமாக சொதப்பியுள்ளது.

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய டி20 வரலாறு:

இந்தப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 போட்டிகளில் விளையாடி இருந்தன. அதில் ஆஸ்திரேலிய அணி 10 போட்டிகளில் வெற்று முன்னிலையில் இருந்த நிலையில், நியூசிலாந்து அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது. ஒரு போட்டி டை ஆகியிருந்தது. ஆஸ்திரேலிய அணி முன்னாள் சாம்பியன் என்பதால் அந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், களத்தில் நடந்ததே வேறு ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியின் வேகத்தின் முன்னாள் பணிந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி தனது 5வது வெற்றியை அசத்தலாக பதிவு செய்துள்ளது.

11 ஆண்டுகளுக்கு பிறகு நியூ.க்கு கிடைத்த வெற்றி!

நியூசிலாந்து அணி கடைசியாக 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் தான் ஆஸ்திரேலிய அணியை வென்றிருக்கிறது. 11 ஆண்டுகளுக்கு பிறகு 15 போட்டிகளுக்கு பின் இந்த வெற்றியை அந்த அணி ருசித்துள்ளது. பேட்டிங்கில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் பின் ஆலென் கொடுத்த அதிரடி தொடக்கம்தான் அந்த அணி 200 ரன்கள் எட்ட காரணமாக அமைந்தது. 16 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 42 ரன்களை மின்னல் வேகத்தில் அவர் குவித்தார். பின்னர் கான்வே 58 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரி உட்பட 92 ரன்கள் குவித்தாலும் கடைசி நேரத்தில் நீஷம் 13 பந்துகளில் அடித்த 26 ரன்களும் 200 ரன்களை எட்ட உதவியாய் இருந்தது.

அனுபவத்தில் மிளிர்ந்த டிம் சவுத்தி!

ஆஸ்திரேலிய அணியை 111 ரன்களில் ஆட்டமிழக்க செய்ய முக்கிய காரணமாக இருந்தது நியூசிலாந்து வீரர்களின் அசத்தலான பந்துவீச்சு. டிம் சவுத்தி, சாண்ட்னர் தலா 3 விக்கெட் சாய்த்து இருந்தாலும் சவுத்தி தன்னுடைய அனுபவமான பந்துவீச்சில் மிளிர்ந்தார். 2.1 ஓவர்களில் அவர் வெறும் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஒரு எக்ஸ்ட்ரா கூட கொடுக்கவில்லை. ஒரு பவுண்டரி மட்டும் விட்டுக் கொடுத்தார். ட்ரெண்ட் பவுல்டும் தன் பங்கிற்கு 4 ஓவர்களில் 24 ர்னகளுக்கு 2 விக்கெட் சாய்த்தார்.

ஆஸ்திரேலியாவில் ஒரு பேட்ஸ்மேன் கூட 30 ரன்களை எட்டவில்லை:

மேக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ், பின்ச், வார்னர் என பெரிய அதிரடி வீரர்கள் பட்டாளமே கொண்டது ஆஸ்திரேலிய அணி. ஆனால், ஒரு வீரர் கூட இந்தப் போட்டியில் 30 ரன்கள் கூட எட்டாதது பெருத்த சோகம். அந்த அணியில் அதிக பட்சமாக மேக்ஸ்வெல் 28 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்த பேட்ஸ்மேன்கள் யாரும் அதிக ரன்கள் எடுக்காத நிலையில், பேட் கம்மின்ஸ் 21 ரன்கள் எடுத்தார். 5 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

வார்னர் (5), பின்ச் (13), மார்ஸ் (16), மேக்ஸ்வெல் (28), ஸ்டொய்னிஸ் (7), டிம் டேவிட் (11), வாடே (2) என ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையே சொதப்பியது.

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா குறைவான ஸ்கோர்!

ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்துள்ளது. 111 ரன்கள் என்பது சொந்த மண்ணில் அந்த அணி எடுத்த மிகக் குறைவான ஸ்கோர். இதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டி மெல்போர்ன் நகரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 127 ரன்கள் எடுத்ததே இதுவரை குறைவான ஸ்கோர் ஆக இருந்து வந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் நீண்ட நாட்களுக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு கிடைத்த வெற்றி இது. 2009ம் ஆண்டிற்கு பிறகு வொயிட் பால் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து வெற்றியை ருசித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com