
மற்ற அணிகளின் போட்டியை காட்டிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு விளம்பர வருவாய் அதிகம் என்பதால், மழை குறுக்கிட்டால் பலத்த நஷ்டம் ஏற்படும்.
ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியாக நாளை (அக்.23) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டி நடைபெற உள்ள நாளன்று மெல்பேர்ன் நகரில் 85 முதல் 90 சதவீதம் மழை பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 1 முதல் 5 மில்லிமீட்டர் வரை மழைப்பொழிவு பதிவாகும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மெல்போர்னில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டி மழையால் அச்சுறுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. 2016இல் இரு அணிகளும் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், இம்முறையும் மழையால் ஆட்டம் தடைப்படும் சூழல் உருவாகியுள்ளது. மற்ற அணிகளின் போட்டியை காட்டிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு விளம்பர வருவாய் அதிகம் என்பதால், மழை குறுக்கிட்டால் ஒளிபரப்பாளர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.
அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைப் போல, லீக் சுற்று போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்கள் இல்லை. எனவே மழையால் இந்த போட்டியை நடத்த முடியாமல் போனால் இரு அணிகளுக்கும் புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். ஒருவேளை மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கபட்டால் ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ”நீங்க என்ன முடியாதுனு சொல்றது” - பாக். கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிக்கை.. செக் யாருக்கு?