Published : 20,Oct 2022 05:53 PM

கிரிக்கெட் உலகில் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் இருப்பும்.. இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையும்!

it-is-a-good-moral-to-say-we-will-not-come-to-play-cricket-in-your-country-A-reminder-to-Amitsha-son

பாகிஸ்தானில் கிரிக்கெட் நடைபெற்றால் அதில் இந்திய அணி பங்கேற்காது என்னும் ஜெய் ஷாவின் கருத்து ஏற்புடையதா.!? அறம் சார்ந்த கருத்தை தான் அவர் தெரிவித்திருக்கிறாரா என்பதை பற்றிய சிறு பார்வை இந்த தொகுப்பு.

பாகிஸ்தானுக்கு பதிலாக வேறு நாட்டில் ஆசியக் கோப்பை:

2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அமைப்பின் பொதுக்குழு கூட்டம் இரு தினங்களுக்கு முன் மும்பையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மகளிருக்கான ஐபிஎல் தொடரை துவங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்கவும், அப்படி இல்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

image

தலைவர் சர்ச்சை ஓயாத நிலையில் அடுத்த சர்ச்சை:

அதே தினத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக உலக கோப்பை வென்ற முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பை வகித்து வந்தார். 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. ஆனால் அவருடன் பிசிசிஐ செயலாளராக பதவியேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது கடும் சர்ச்சையை கிளப்பியது.

image

இதையும் படிக்கலாமே: பிசிசிஐக்கு புதிய தலைமை! யார் இந்த ரோஜர் பின்னி..?

ஆடுகளம் தாண்டி எழும்பிய அதிருப்திக் குரல்:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பொறுப்பு வகித்து வந்த சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து அவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்புமாறு மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை எழுதினார். “கங்குலி ஒரு திறமையான நிர்வாகி. ஆனால், அவர் தலைவராக ஏன் தொடர முடியவில்லை என்று எனக்கு தெரியவில்லை. சில காரணங்களால், அமித் ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் (பிசிசிஐ) தொடர்கிறார். ஆனால் சவுரவ் கங்குலி நீக்கப்பட்டார். நோக்கம் என்ன? அதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

கங்குலி அரசியல் கட்சி உறுப்பினர் அல்ல; பழிவாங்காதீர்கள்”..கொந்தளித்த மம்தா! நடந்தது என்ன? | Mamata Banerjee bats for Saurav Ganguly, appeals to PM Modi to send him to ICC ...

கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் அவரைத் தெரியும். அவர் அனைவருடனும் பணியாற்றியவர். அவர் பிரபலமானவர். அதனால்தான் அவர் இழக்கப்படுகிறாரா? அவர் விலகலை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். அது மோசமானது மற்றும் வருத்தமளிக்கிறது. கங்குலியை ஐசிசிக்கு அனுப்புவதுதான் அவரது "நீக்கத்திற்கு" ஈடுகொடுக்கும் ஒரே வழி. கங்குலி ஐசிசிக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அரசாங்கத்தை பழிவாங்கும் நோக்கில் அரசியல் ரீதியாக முடிவு எடுக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர் ஒரு அரசியல் கட்சி உறுப்பினர் அல்ல. கிரிக்கெட்டுக்காகவும், விளையாட்டிற்காகவும் ஒரு முடிவை எடுங்கள்” என்று பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி காட்டமான கருத்துகளுடன் கடிதம் ஒன்றை எழுதினார்.

பதிலடி கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்:

பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை நடைபெற்றால் அதில் இந்திய அணி பங்கேற்காது என்ற ஜெய் ஷாவின் கருத்து இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதை பாதிக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிலளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷாவின் கருத்து ஆச்சர்யமளிப்பதாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

image

பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை நடத்த முடிவு செய்யப்பட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்கியதே ஜெய்ஷா தான்!

“ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்களின் அமோக ஆதரவுடனும் ஒப்புதலுடனும் பாகிஸ்தானுக்கு ஆசியக் கோப்பை தொடரை நடத்த அனுமதி வழங்கப்பட்டபோது, அந்த கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஜெய் ஷா பிறகு, ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துகளின் ஒட்டுமொத்த தாக்கம் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை பாதிக்கலாம்.” என்று தனது அறிக்கையில் காட்டமான கருத்துகளை முன்மொழிந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டுக:

“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்றுவரை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களையும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரின் அறிக்கையையும் தற்போது வரை பெறவில்லை. எனவே, இந்த முக்கியமான விஷயம் தொடர்பாக கூடிய விரைவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.” என தனது அறிக்கையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

image

அடுத்து என்ன நடக்கும்..?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியா செலுத்தி வரும் ஆதிக்கம் காரணமாக இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஐசிசி ஆதரவு அளிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒரு சர்வதேச தொடரில் பங்கேற்பதும் அதிலிருந்து விலகுவதும் அந்தந்த நாட்டு வாரியங்களின் தனிப்பட்ட இறையாண்மை சார்ந்த முடிவு என்று சொல்லி இந்த விவகாரத்தை ஐசிசி முடித்து வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த செயல் அறமானதா என்பதை உலகத்தோர் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். அதற்கு ஓர் சம்பவத்தை உங்கள் நினைவுக்கு சமர்பிக்கிறோம்.

பாகிஸ்தான் வெற்றிக்கு எழுந்து நின்று கைதட்டிய சென்னை மக்கள்!

image

1997 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியில் 271 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 12 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற போது, அரங்கு நிறைந்த சேப்பாக்கம் மைதானம் அமைதி வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் ஒரு நபர் எழுந்து நின்று கைதட்ட துவங்கியதும், ஒட்டுமொத்த மைதானமே எழுந்து நின்று கைத்தட்டல் ஒலியால் பாகிஸ்தான் வீரர்களை கண்ணீர் வெள்ளத்தில் ஆழ்த்தினர். விண்ணதிர எழுந்த கரவொலியை கனவிலும் எதிர்பாராத பாகிஸ்தான் வீரர்கள் உற்சாகமாக மைதானத்தை வட்டமிட்டு தங்களுக்கான பாராட்டை சிரம் தாழ்ந்து ஏற்றுக்கொண்டனர்.

உலக விளையாட்டு வரலாற்றில் தலைசிறந்த தருணமாக வர்ணிக்கப்படும் அந்த தருணத்தை நிகழ்த்திக் காட்டிய மண்ணில் இருந்து உங்கள் நாட்டிற்கு நாங்கள் விளையாட வர மாட்டோம் என்பது அறமான செயலா என்பதை அமித் ஷாவின் மகன் சற்று சிந்திக்க வேண்டும். எல்லை கடந்தது மனிதம் மட்டுமல்ல., ஆடுகளங்களும் தான்!

image

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த காரணத்தால் இரு நாடுகளுக்கும் இடையே நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளும் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த கூடும் என்ற நோக்கத்தில் அப்போது போட்டிகள நடைபெறுவது தவிர்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான நெருக்கடி சூழல் இல்லாத போது போட்டிகள் நடைபெறுவதை தவிர்ப்பது இரு நாடுகளுக்கு இடையே மேலும் விலகலையே ஏற்படுத்தக்கூடும். "ஒருவரை உங்களால் நீண்ட நாட்களுக்கு வெறுக்க இயலாது" என்றுதான் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் அந்நாடுகளுக்கு இடையே சகோதரத்துவத்தை பலப்படுத்தும் என்பதால் நிறுத்தப்பட்ட போட்டிகளை மீண்டும் துவக்குவது குறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அமர்ந்து பேசி முடிவெடுப்பது சாலச்சிறந்த ஒன்றாக இருக்கும்.

ஜெய்ஷா இருப்பும், கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையும்:

பிசிசிஐ மற்றும் ஐசிசி கிரிக்கெட் அமைப்புகளில் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் ஜெய்ஷா முக்கிய பங்காற்றுகிறார். அவர் தன்னிச்சையாக ஆரோக்கியமான முடிவினை எடுக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது ஜெய்ஷாவை மையமாக வைத்து விமர்சனங்களுக்கு வித்திடும். எத்தனை காலத்திற்கு இந்த பிரச்னை நீடிக்கவிடுவது என்ற கேள்வியும் யாருக்காக நீடிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழும். அதற்கு நிச்சயமாக ஜெய்ஷா பதிலளிக்க வேண்டியிருக்கும். 

இதனையெல்லாம் தாண்டி இந்திய - பாகிஸ்தான் ரசிகர்களின் மனங்களை புரிந்து கொண்டு ஒரு நல்ல முடிவினை இருநாட்டு அரசுகளும் எடுக்க வேண்டும் அதற்கு கிரிக்கெட் அமைப்புகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய வேண்டுகோளாக உள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்