Published : 20,Oct 2022 11:49 AM
ம.பி : விபத்தில் இறந்த சிறுமியின் உடலை தோளிலேயே தூக்கிகொண்டு பேருந்தில் சென்ற அவலம்

விபத்தில் உயிரிழந்த சகோதரியின் மகளை தோளில் சுமந்தே பேருந்தில் ஏறி கிராமத்திற்கு கொண்டுசென்ற நபரின் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் மரணமடைந்த தனது சகோதரியின் மகளை மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுசென்றுள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பிணத்தை புதைக்க அரசு மயானத்தை தேடி அலைந்துள்ளார் அந்த நபர். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும், தனியார் மயானத்தில் புதைக்கவோ அல்லது வாகனம் வைத்து கொண்டுசெல்லவோ போதிய வசதியில்லாத காரணத்தால், தோளிலேயே தூக்கிக்கொண்டு, தனது சொந்த கிராமத்திற்கு பேருந்தில் சென்றுள்ளார்.
பேருந்தில் டிக்கெட் எடுக்கவே பணம் இல்லாத அந்த நபருக்கு சக பயணி ஒருவர் உதவியுள்ளார். மனதில் துக்கத்தையும், தோளில் பிணத்தையும் சுமந்துகொண்டு அந்த நபர் பேருந்தில் பயணித்த காட்சி பார்ப்போரை கலங்க வைக்கிறது.
Video: Body On Shoulder, Madhya Pradesh Man Walks On Busy Road To Bus Stop https://t.co/5VofCaSQ7fpic.twitter.com/PPyJddQqnQ
— NDTV (@ndtv) October 20, 2022
அதே சத்தர்புர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்த 4 வயது குழந்தையை குடும்பத்தார் தோளில் தூக்கிச்சென்ற சம்பவம் இணையங்களில் பரவி வைரலானதை அடுத்து அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறி இருப்பது சோகத்தை கொடுக்கிறது. இது அந்த மாவட்டத்தில் அவசர தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை காட்டுவதாக சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.