Published : 19,Oct 2022 10:52 PM
பணியில் இருந்த காவலரை கடுமையாக தாக்கி சீருடையையும் கிழித்த இளைஞர் - காரணம் இதுதான்!

எஸ்யூவி காரில் அதிவேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற இளைஞரை தடுத்து நிறுத்தியதால், ஆத்திரத்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவலரை நடுரோட்டில் அடித்து துவம்சம் செய்தது மட்டுமில்லாமல், அவரது சீருடையை இளைஞர் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் ராஜ்புரா-அம்பாலா சாலையில் உள்ள குருத்வாரா மஞ்சி சாஹிப் (NH-44) பகுதியில், கடந்த 13-ம் தேதி போக்குவரத்து காவலர் அசோக் குமார் பணியில் ஈடுபட்டிருந்தார். காலை 9 மணியளவில் சண்டிகர் பதிவு எண் கொண்ட எஸ்யூவி கார் ஒன்று ராஜ்புரா பகுதியில் இருந்து அதிவேகத்தில் வந்து, இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த 3 பேர் கீழே விழுந்து காயமடைந்தநிலையில், ஓடிச் சென்று போக்குவரத்து காவலர்கள் உதவி செய்துக் கொண்டிருந்தனர். அப்போது விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை காவலர் அசோக் குமார் தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காரில் இருந்து இறங்கி வந்து காவலர் பணியில் இருக்கிறார் என்று தெரிந்தும், அவரை சரமாரியாக தாக்கியதுடன் காவல் சீருடையையும் கிழித்துள்ளார். இதையடுத்து காவலர் அசோக் குமார் கொடுத்தப் புகாரின் பேரில், வழக்குப் பதிவுசெய்த போலீசார், எஸ்யூவி காரை ஓட்டி வந்த இளைஞர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து பதிண்டாவில் உள்ள அகர்வால் காலனியைச் சேர்ந்த லாவிஷ் பத்ரா என்ற இளைஞர் தான் காவலரை தாக்கியது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த போக்குவரத்து காவலர் அசோக் குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் நடத்தப்பட்ட விசாரணையில் விபத்து ஏற்படுத்திய இளைஞர் மனநலத்திற்காக சில மருந்துகளை உட்கொண்டு வருவதாக அவரது குடும்பத்தினர் சில மருத்துவம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதால், தொடர் விசாரணை நடத்தப்பட்டு அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று அம்பாலா காவல்துறை கண்காணிப்பாளர் ஜஷந்தீப் சிங் ரந்தவா கூறியுள்ளார். இந்நிலையில், போக்குவரத்து காவலரை இளைஞர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
A man in Ambala was seen beating up a cop who stopped him for overspeeding. The accused allegedly hit two motorcycles & then tried to flee. He assaulted the victim, ESI Ashok Kumar who also claimed that his uniform tore in the brawl.#ambala#manbeatscop#ashokkumar#lavishbatrapic.twitter.com/FH6n0o6pjS
— Mirror Now (@MirrorNow) October 18, 2022