4 ஜிம்பாப்வே பேட்டர்களை க்ளீன் போல்டாக்கிய அல்சாரி ஜோசப்! வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

4 ஜிம்பாப்வே பேட்டர்களை க்ளீன் போல்டாக்கிய அல்சாரி ஜோசப்! வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
4 ஜிம்பாப்வே பேட்டர்களை க்ளீன் போல்டாக்கிய அல்சாரி ஜோசப்! வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 16 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், இன்று பி பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை நடத்தின. இன்றைய ஆட்டத்தில் தோற்கும் அணி சூப்பர் 12 சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழக்க வேண்டியிருக்கும் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்கின. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் 13 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறிய நிலையில், சார்லஸ் பொறுப்புணர்ந்து நிலைத்து நின்று ஆடினார். மறுபுறத்தில் லூயிஸ்(15), நிக்கோலஸ் பூரன்(7) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில், அரைசதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சார்லஸ் 45 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அதிரடி வீரர் ரோவ்மான் போவெல் 28 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சிகந்தர் ராஸா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து ஜிம்பாப்வே அணி 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடத் துவங்கியது.

ஓப்பனர்களாக களமிரங்கிய வெஸ்லீ, ரெஜிஸ் சகாப்வா ஆகிய இருவரும் அதிரடியாக ஆட்டத்தை துவங்கிய போதிலும், அல்சாரி ஜோசப்பிடன் க்ளீன் போல்டாகி நடையைக் கட்டினார் கேப்டன் ரெஜிஸ் சகாப்வா. அடுத்து வந்த டோனியையும் அல்சாரி க்ளீன் போல்டாக்க ஜிம்பாப்வேயின் டாப் ஆர்டர் தூள் தூளாக நொறுங்கியது.

வெற்றியை நோக்கி அணியை நகர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட மிடில் ஆர்டரை மற்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களான ஹோல்டர், ஓடியன் ஸ்மித், ஒபெட் மெக்காய் ஆகியோர் சிதைக்க, தோல்வியை நோக்கிய அந்த அணியின் பயணம் துவங்கியது. மீண்டும் களத்திற்கு பந்துவீச வந்த அல்சாரி ஜோசப், லூக் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவரையும் க்ளீன் போல்டாக்கி அந்த அணியின் தோல்வியை உறுதி செய்தார்.

இறுதியாக 18.2 ஓவர்கள் மட்டுமே களத்தில் நிலைத்திருந்த ஜிம்பாப்வே அணி, அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 122 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று ரன் ரேட்டையும் உயர்த்திக் கொண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதிகபட்சமாக அந்த அணியின் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தனதாக்கினார். இதில் அவர் வீழ்த்திய அந்த 4 விக்கெட்டுகளும் க்ளீன் போல்ட்டாக்கி வீழ்த்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியப் போட்டி கைவிடப்பட்டது:

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணி முந்தைய பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

நாளைய போட்டிகள்:

நாளை நடைபெறும் இரண்டு முக்கியமான போட்டிகளில் நமீபியா அணி ஐக்கிய அமீரகத்தையும், இலங்கை அணி நெதர்லாந்தையும் எதிர்கொள்கின்றன. சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

நாளை மறுநாள் (அக். 21):

நாளை மறுநாள் (அக்.21) அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், ஸ்காட்லாந்து அணி ஜிம்பாப்வே அணியையும் எதிர்கொள்கின்றன. அக்டோபர் 21ம் தேதியுடன் லீக் குரூப் சுற்று போட்டிகள் முடிவடைகின்றன. அக்டோபர் 22 ஆம் தேதி முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்குகிறது. முதல் நாள் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தையும், இங்கிலாந்து ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கின்றன. இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com