Published : 18,Oct 2022 10:21 PM

ஹிஜாப் அணிய மறுத்து பாறையேற்ற போட்டியில் கலந்து கொண்ட ஈரான் வீராங்கனை திடீர் மாயம்!

Iranian-Athlete-Elnaz-Rekabi-Missing-After-Competing-in-Seoul-Without-Hijab

தென் கொரியாவில் அக்டோபர் 16 அன்று நடைபெற்ற ஆசிய பாறை ஏறும் போட்டியில், ஈரானிய வீராங்கனை ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற நிலையில் அவர் தற்போது மாயமாகியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கிறது.

33 வயதான எல்னாஸ் ரெகாபி, 2021 ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டுக் கழகத்தின் (IFSC) உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற ஈரானைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர். இந்த ஆண்டு சியோலில் நடந்த ஒருங்கிணைந்த போல்டர் மற்றும் லீட் இறுதிப் போட்டியில் எல்னாஸ் ரெகாபி நான்காவது இடத்தைப் பிடித்தார். ஹிஜாப் அணிய மாட்டேன் என அவர் எதிர்ப்பு தெரிவித்து அதில் உறுதியாக நின்றதற்கு சர்வதேச அளவில் கவனத்தை பெற்றார்.

1979 இல் ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் விதிக்கப்பட்ட கட்டாய ஹிஜாப் விதியை கடைபிடிக்க மறுத்த ஈரானைச் சேர்ந்த இரண்டாவது தடகள வீராங்கனை இவர் ஆவார். எல்னாஸ் ரெகாபிக்கு முன், குத்துச்சண்டை வீரர் சதாஃப் காடெம் 2019 இல் பிரான்சில் நடந்த சர்வதேச போட்டியில் ஹிஜாப் அணியாமல் போட்டியிட்டார். காடெம் ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது பிரான்சில் இருக்கிறார்.

இந்நிலையில், அக்டோபர் 16 அன்று நடைபெற்ற ஆசிய பாறை ஏறும் போட்டியில் கலந்துகொண்டு விமான நிலையத்தை அடைந்ததும் ரெகாபி நேரடியாக ஈவின் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று ஈரானின் உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இத்தகைய சூழலில், ஞாயிறு இரவு முதல் ரெகாபியின் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். ரெகாபியின் பாஸ்போர்ட் மற்றும் மொபைல் ஃபோன் அவரிடமிருந்து எடுக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மறுபக்கம் சியோலில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஈரான் தூதரகம், எல்னாஸ் ரெகாபி தொடர்பான செய்திகள் அனைத்தும் ”போலி, பொய்யான செய்திகள்” என்று மறுத்துள்ளது. இரண்டு நாட்களாகியும் எல்னாஸ் ரெகாபி எங்குள்ளார் என்பது இதுவரை தெரியவில்லை.

இதனிடையே, எல்னாஸ் ரெகாபி 2016ம் ஆண்டில் கொடுத்த பேட்டி ஒன்றில், ஹிஜாப் அணியும்போது தனது விளையாட்டு பயிற்சியில் ஏற்படும் சிரமத்தைப் பற்றி பேசியிருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ’’ஹிஜாப்பை மதிக்கிறோம். ஆனால், விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் போதும், போட்டியின் போது உடல் சூடாகி விடும். அப்போது உங்கள் உடல் வெப்பத்தை நீங்கள் வெளியேற்ற வேண்டும். உடல் சூடாக இருக்கும் போது ஹிஜாப் அணிந்திருந்தால் உடலுக்கு பிரச்சனையாகிவிடும்” எனப் பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள் - கடலுக்கடியில் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்க பெண் செய்த செயல்! என்ன செய்தார் தெரியுமா?

image

பெண்களுக்கான ஈரானிய நிர்வாகத்தின் சட்டங்களுக்கு எதிராக சியோலில் ரெகாபியின் துணிச்சலான செயலுக்கு ஆதரவும் எதிர்ப்புகளுக்கும் கிளம்பிய நிலையில், தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. அதனால், நிச்சயம் ஈரானிய அரசால் அவர் நாடு கடத்தப்பட்டு இருப்பார் என்ற கருத்தே பலரால் முன் வைக்கப்படுகிறது.

ஈரானில் 22 வயதான இளம் பெண் மஹ்சா அமினியின் மரணத்தை தொடர்ந்து எழுந்த போராட்டங்களில் குறைந்தது 215 பேர் உயிரழந்துள்ளனர். இன்றும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ஈரானில் தணியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்