Published : 18,Oct 2022 01:24 PM

தெருநாய் கடித்துக் குதறியதில் பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்

Noida-Baby-Dies-After-Attack-By-Street-Dog-Angry-Residents-Protest

நொய்டாவில் 7 மாத குழந்தையை தெருநாய் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தெருவில் நடந்து செல்வோரை நாய்கள் கடித்துக் குதறி காயப்படுத்தும் சம்பவங்கள் தினந்தோறும் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. குறிப்பாக தெருவில் நடக்கும் குழந்தைகளுக்கு தெருநாய்கள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அப்படித்தான், நொய்டாவில் 7 மாத குழந்தையை தெருநாய் கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

நொய்டாவின் செக்டார் 100 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. அங்கு நேற்று கட்டட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத ஆண் குழந்தையுடன் வேலைக்கு வந்துள்ளனர். தம்பதி தங்கள் குழந்தையை கட்டிட பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகே வைத்துவிட்டு வேலை செய்து வந்தனர். அப்போது, அந்த குடியிருப்பு பகுதிக்குள் வந்த தெருநாய் ஒன்று தனியாக இருந்த அந்த 7 மாத கைக்குழந்தையை கடித்துக் குதறியுள்ளது. இதில் பச்சிளம் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட கட்டட தொழிலாளிகளான பெற்றோர், விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது, குழந்தையை தெருநாய் கடித்து குதறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

image

பின்னர், நாயிடமிருந்து குழந்தையை மீட்ட பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கபப்ட்டது. ஆனால், தெருநாய் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 மாத பச்சிளம் குழந்தையை தெருநாய் கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தெருநாய்கள் தொல்லை தீராத பிரச்சினையாக உள்ளது. தெரு நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: 18 நாய்கள் விஷம் வைத்து கொலை - தெருநாய் தொல்லையில் இருந்து தப்ப தவறான முடிவு

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்