Published : 18,Oct 2022 11:23 AM
டி20 உலகக் கோப்பை: இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சச்சின் கணிப்பு

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கணித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணி வரும் 23ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதையொட்டி முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், ''இப்போதெல்லாம் வீரர்கள் வலைப்பயிற்சியில் பல்வேறு வகையான ஷாட்களை பயிற்சி செய்கிறார்கள். பேட்டிங்கிலும் சரி, பீல்டிங்கிலும் சரி, நுணுக்கமான, விதவிதமான பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இதனால் அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் விளையாடிய காலத்தில் நாங்கள் எப்போதாவதுதான் அதுபோல் பயிற்சி செய்வோம்.
பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடியதில்லை. இலங்கை - நமீபியா அணிகளுக்கிடையேயான ஆட்டத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். மைதானத்தின் மேற்பரப்பில் ஈரப்பதம் இருந்தது. எனவே ஸ்டிரைக் ரேட்களில் கவனம் செலுத்தாமல் விக்கெட்டுகளை கைவசம் வைத்திருப்பது நல்லது. ஆஸ்திரேலியா மைதானங்களில் 185, 190 ரன்களுக்கு மேல் சேர்ப்பது கடினம். எனவே 170 ரன்களை தொட்டாலே வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
ஊக்குவித்தல் மற்றும் பாராட்டப்படுவதை விட சிறந்த டானிக் எதுவும் இல்லை. அந்தவகையில் வெற்றியும் பாராட்டும் 32 வயதான சூர்யகுமார் யாதவை ஒரு சிறந்த வீரராக மாற்றிவிட்டது. அவர் இன்று மிகவும் நம்பிக்கையுடன் விளையாடுகிறார். டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரையில் அந்த அணி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் விளையாடி பழக்கப்பட்டது என்பதால் அந்த அணியும் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பிருக்கிறது'' என்றார்.
இதையும் படிக்கலாமே: டெத் ஓவர்களில் ஆஸி.க்கு ஷாக் கொடுத்த இந்திய பவுலர்கள்! வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்!