குஜராத்தில் இந்தியை பயிற்று மொழியாக்குவோம் என்று அமித் ஷா சொல்வாரா? - திருமாவளவன் அறிக்கை!

குஜராத்தில் இந்தியை பயிற்று மொழியாக்குவோம் என்று அமித் ஷா சொல்வாரா? - திருமாவளவன் அறிக்கை!
குஜராத்தில் இந்தியை பயிற்று மொழியாக்குவோம் என்று அமித் ஷா சொல்வாரா? - திருமாவளவன் அறிக்கை!

அலுவல் மொழிக்கான பாராளுமன்ற குழுவின் அறிக்கையில் இந்தித் திணிப்பு பரிந்துரைகளை முன்வைத்துள்ள அக்குழுவின் தலைவர் மத்திய அமைச்சர் அமித் ஷா அப்பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான பாராளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்தியையே பயிற்று மொழியாக்க வேண்டும்; ஒன்றிய அரசின் நிர்வாகத் தொடர்புகள் அனைத்துக்கும் இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; இந்தியைப் பயன்படுத்தாத மத்திய அரசின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பரிந்துரைகள் கூறப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் வைக்கப்படும் வரை ரகசியமாக இருக்க வேண்டும் என்பது விதி. குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட அலுவல் மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் அறிக்கையின் விவரங்கள் உள்துறை அமைச்சகத்திலிருந்து தான் கசிய விடப்பட்டது எனக் கூறப்படுகிறது. அவ்வாறெனில், அதற்குப் பொறுப்பேற்று பாராளுமன்ற குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து அமித் ஷா விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தாக்கல் செய்வதற்கு முன்பே அறிக்கையின் விவரம் ஊடகங்களுக்கு வெளியானதால் அந்த அறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும்;

அலுவல் மொழிக்கான பாராளுமன்றக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் யாரும் இடம்பெறுவதில்லை. இந்தியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அந்தக் குழுவில் இப்போதும்கூட பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக உள்ளனர். பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு எல்லா நிலைகளிலும் இந்தியைத் திணிப்பதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிந்துரைகள் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களை திருப்திப்படுத்தி அவர்களுடைய வாக்குகளை வாங்குவதற்கான பாஜகவின் தந்திரம் என்பதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் அவரது சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்று ’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் குஜராத்தில் இந்தியைப் பயிற்று மொழி ஆக்குவோம்’ என்று பேசத் தயாரா? அப்படி அவர் பேசி குஜராத்தில் வாக்கு கேட்க முடியுமா? நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் சூழலில் அதைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் பட்டினியால் வாடுவோர் அதிகம் உள்ள நாடு என்னும் அவப்பெயரை இந்தியாவுக்கு உருவாக்கி இருக்கும் பாஜக அரசு, மொழி அடிப்படையிலான இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com