குரூப் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி.. டி20 உலகக்கோப்பையின் சுழற்சி அட்டவணை முழு விபரம்

குரூப் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி.. டி20 உலகக்கோப்பையின் சுழற்சி அட்டவணை முழு விபரம்
குரூப் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி.. டி20 உலகக்கோப்பையின் சுழற்சி அட்டவணை முழு விபரம்

ஐசிசி நடத்தும் 8ஆவது டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளன. இன்று தொடங்கி அடுத்த மாதம் நவம்பர் 13ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், 2022ஆம் ஆண்டின் டி20 உலககோப்பையில் பங்கேற்கவிருக்கும் 12 அணிகள், எத்தனை ஆட்டங்கள் வெற்றி பெற்று மற்றும் எத்தனை புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த சுற்றுகள் முன்னேறி அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை எட்டும் என்றும், அதற்கான சுழற்சி முறைகள் என்ன என்பதை பற்றிய முழுமையான தொகுப்பை இதில் பார்ப்போம்.

இதுவரையிலான டி20 உலகக்கோப்பை - ஓர் பார்வை:

2007 ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கிய டி20 வடிவ போட்டியானது, 2009, 2010, 2012, 2014, 2016, மற்றும் 2021 என்று அடுத்தடுத்து 7 உலகக் கோப்பைகளை சந்தித்து தற்போது 8ஆவது உலககோப்பையில் அடிஎடுத்து வைத்திருக்கிறது.

அதிக கோப்பைகளை வென்ற அணியாக 2 கோப்பைகளை (2012 & 2016) வென்று வெஸ்ட் இண்டிஸ் அணி முன்னிலையில் இருக்கிறது. அதேபோல் அதிக முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியாக இலங்கை அணி 3 முறை ( 2009, 2012 & 2014) முன்னேறி முன்னிலையில் இருக்கிறது. இந்தியா(2007), பாகிஸ்தான்(2009), இங்கிலாந்து(2010), இலங்கை(2014) மற்றும் ஆஸ்திரேலியா(2021) அணிகள் தலா ஒரு முறை கோப்பையை ருசிப்பார்த்திருக்கின்றன.

டி20 உலககோப்பை 2022:

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 இன்று முதல் நவம்பர் 13 வரை நடைபெறவிருக்கும், 8ஆவது உலககோப்பையான 2022 டி20 உலககோப்பையில் மொத்தமாய் 16 அணிகள் பங்குபெற்று 45 போட்டிகள் விளையாடப்பட இருக்கின்றன. முதல் சுற்றில் பங்குபெறும் 12 அணிகளுக்கான இடங்களில் 8 அணிகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், மீதம் உள்ள 4 இடத்தை பிடிக்க போராடும் 8 அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ”குரூப் ஸ்டேஜ்” பிரிவில் மொத்தம் 12 போட்டிகளாய் நடக்கவிருக்கின்றன. இறுதி செய்யப்பட்ட 12 அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் ”குரூப் 12” சுற்று போட்டிகளாய் 30 போட்டிகள் சுழற்சி முறையில் நடத்தப்படும்.

சூப்பர் 12 சுற்றில் முன்னிலை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்து பலப்பரீட்சை நடத்தும். அரையிறுதிப்போட்டிகள் முறையே நவம்பர் 9ஆம் தேதி மற்றும் 10 தேதி நடக்கவிருக்கின்றன. கோப்பையை வெல்லும் இறுதிப்போட்டியானது நவம்பர் 13ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ஆடுகளத்தில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

குரூப் ஸ்டேஜ் போட்டிகள்:

உலககோப்பைக்கான போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்குபெற்று இருக்கின்றன. அதில் 8 அணிகள் டி20 தரவரிசை புள்ளிகளின் படி உலககோப்பைக்கான அணிகளாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. மற்ற 8 அணிகளும் மீதமுள்ள 4 இடங்களில் இடம்பிடிக்க போட்டியிடுகின்றன.

உறுதிப்படுத்தப்பட்ட 8 அணிகள் விவரம்:

8 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் குழுவில் ”ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து” முதலிய 4 அணிகளும், இரண்டாவது குழுவில் ”வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா” முதலிய 4 அணிகளும் இடம்பிடித்துள்ளன.

குரூப் ஸ்டேஜ் 8 அணிகள் விவரம்:

A மற்றும் B அணிகளாக பிரிக்கப்பட்டு,

A அணியில்.. ”நமீபியா, நெதர்லாந்து, இலங்கை மற்றும் யுனைடட் அமீரகம் எமிரேட்ஸ்” என 4 அணிகளும்,

B அணியில்.. ”அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஜிம்பாப்பே” முதலிய 4 அணிகளும் விளையாட இருக்கின்றன.

குரூப் ஸ்டேஜ் சுழற்சி முறை:

குரூப் A அணியில் உள்ள 4 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை சந்திக்கின்றன. அதில் அதிக வெற்றிகள் மற்றும் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் சூப்பர் 12 அணிகளுக்கான பட்டியலில் இடம்பெறும்.

அதேபோல் குரூப் B அணியில் உள்ள 4 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை சந்திக்கின்றன. அதில் அதிக வெற்றிகள் மற்றும் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் சூப்பர் 12 அணிகளுக்கான பட்டியலில் இடம்பெறும்.

இரண்டு குழுக்களிலும் 6, 6 போட்டிகளாக மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட்டு முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் 12 அணிகளுக்கான பட்டியலில் இடம்பெறும்.

சூப்பர் 12 சுழற்சி முறை:

குரூப் ஸ்டேஜ் அணியில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகளில் குரூப் A அணியில் முதல் இடம் பிடிக்கும் A1 அணியும், குரூப் B அணியில் இரண்டாம் இடம் பிடிக்கும் B2 அணியும் சூப்பர் 12 அணியில் குரூப் 1 பிரிவில் பங்குபெற்று விளையாடும்.

அதேபோல் குரூப் A அணியில் இரண்டாம் இடம் பிடிக்கும் A2 அணியும், குரூப் B அணியில் முதல் இடம் பிடிக்கும் B1 அணியும் சூப்பர் 12 அணியின் குரூப் 2 பிரிவில் பங்குபெற்று விளையாடும்.

பின்னர் குரூப் 1` அணியில் இருக்கும் 6 அணிகளில் ஒவ்வொரு அணியும் தன் குரூப்பில் உள்ள மற்ற 5 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும் மற்றும் குரூப் 2 அணியில் இருக்கும் 6 அணிகளில் ஒவ்வொரு அணியும் தன் குரூப்பில் உள்ள மற்ற 5 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இரண்டு பிரிவுகளிலும் 15, 15 போட்டிகளாக நடத்தப்பட்டு, அந்தந்த பிரிவில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் 2 அணிகளாய் மொத்தம் 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும். பின்னர் அரையிறுதிப்போட்டியில் வெற்றிப்பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டியில் களம் புகும்.

இந்திய அணி சந்திக்கும் 5 அணிகள் :

2022 ஆம் ஆண்டின் உலககோப்பையிலும் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியையே (அக்டோபர் 23 அன்று ஞாயிறு கிழமை) எதிர்கொண்டு விளையாட விருக்கிறது.

இரண்டாவது போட்டி A2 அணியுடன் (அக்டோபர் 27 அன்று வியாழன் கிழமை),

மூன்றாவது போட்டி தென்னாப்பிரிக்கா அணியுடன் ( அக்டோபர் 30 அன்று ஞாயிறு கிழமை),

நான்காவது போட்டி வங்கதேச அணியுடன் ( நவம்பர் 2 அன்று புதன் கிழமை), மற்றும் 5ஆவது போட்டியானது B1 அணியுடன் (நவம்பர் 6 ஞாயிறு கிழமை) முறையே நடைபெற இருக்கிறது.

போட்டி நேரம் மற்றும் ஆடுகளங்கள்:

மெல்போர்ன், அடிலய்டு, சிட்னி, ப்ரிஸ்பேன், பெர்த் மற்றும் ஹொபர்ட் முதலிய ஆஸ்திரேலியாவின் அனைத்து ஆடுகளங்களிலும் பகுதி வாரியாக சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்கவிருக்கின்றன. அரையிறுதிப்போட்டிகள் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி முறையே சிட்னி மற்றும் அடிலய்டு மைதானங்களிலும், இறுதிப்போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்திலும் நடக்கவிருக்கிறது.

போட்டியின் நேரம் ஆஸ்திரேலியாவின் லோக்கல் நேரத்தைப் பொறுத்து இந்திய நேரப்படி அதிகாலை 5.30 AM, 8.30 AM, 9.30 AM மற்றும் பகல் 12.30 PM, 1.30 PM, 4.30 PM நேரங்களில் நடைபெற இருக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com