
22 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை தேர்தல் நடக்கவுள்ளது. சென்னை சத்யமூர்த்தி பவனில் ஏற்பாடுகள் தீவிரமாகிவருகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி என நேருவின் குடும்பத்தை சேர்ந்த யாரும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடாமல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் 9,300 பேர் அகில இந்திய அளவில் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர்.இதற்காக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று மாலை விமானம் மூலம் டெல்லியில் இருந்து 4 வாக்குப்பட்டிகள் வர உள்ளன.
தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கே, மற்றும் சசி தரூர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்காக சத்தியமூர்த்தி பவனில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது.வாக்களிப்பவர்கள் தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் வேட்பாளர் பெயருக்கு நேராக டிக் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தின் சார்பில் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே சத்தியமூர்த்தி பவன் வளாகத்திற்குள் நாளை அனுமதிக்கப்படுவார்கள்.
காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பிரதாப் பானு சர்மா, உதவி தேர்தல் அதிகாரிகளாக நெய்யாற்றின்கரை சணல் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த அஞ்சலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்களிக்க வருபவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயருக்கு நேராக கையெழுத்து போட்ட பின்னர் வாக்குச்சீட்டு வழங்கப்படும் வாக்களித்து முடிந்ததும், அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியே வந்து விட வேண்டும். தேர்தல் முடிந்ததும் வாக்கு பெட்டிகள் நாளை இரவே டெல்லி கொண்டு செல்லப்படும் வாக்குகள் 19ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.