Published : 15,Oct 2022 07:54 PM

மீண்டும் முட்டுக்கட்டை போடும் தென்னிந்திய சினிமா? - தாக்குப் பிடிக்குமா பாலிவுட் படங்கள்

Kantara-hindi-deafening-Twitter-buzz-drowns-Doctor-G-Code-Name-Tiranga-box-office-collection-day-1

கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘காந்தாரா’ திரைப்படம், இந்தியில் வெளியான ‘டாக்டர் ஜி’, ‘கோட் நேம் திரங்கா’ ஆகியப் படங்களை விட நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதனால் தென்னிந்தியா சினிமாக்கள், பாலிவுட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திவருவதாகவே கூறப்படுகிறது. இதுகுறித்து சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

பாலிவுட்டில் ஒருகாலத்தில் எடுக்கப்பட்ட பல படங்கள் தென்னிந்தியா சினிமாக்களில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல தென்னிந்தியா படங்கள், பாலிவுட்டில் அதிகளவில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. ‘கைதியின் டைரி’, ‘தேவர் மகன்’ உள்பட பல படங்கள் அப்போதே பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டன. எனினும், தற்போது தென்னிந்திய படங்களால், பாலிவுட்டின் வசூல் நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதாகவே பார்க்கப்படுகிறது.

ராஜமௌலியின் ‘பாகுபலி’ தான் இந்த டிரெண்டை கடந்த 10 வருடங்களில் ஆரம்பித்து வைத்ததாக கூறப்பட்டாலும், கொரோனா ஊரடங்கால் மக்கள் ஓடிடி பக்கம் திரும்பியது, இதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஏனெனில் வீட்டில் இருந்தே சவுகரியமான நேரத்தில் அனைத்து மொழிகளிலும் உள்ள திரைப்படங்களை பார்க்க வசதி செய்தது ஓடிடிதான்.

image

இதனால் மக்கள் நல்லப் படங்களை தேடித் தேடிப் பார்ப்பதும் அதிகரித்து வருகிறது. ஏன், ஸ்பானீஷை சேர்ந்த நெட்ஃபிளிக்ஸின் ‘மணிஹெய்ஸ்ட்’ கூட ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல ட்ரெண்ட் ஆனது. கதை, திரைக்கதை, படத்தின் உருவாக்கம் ஆகியவைப் பிடித்தால் போதும், மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘புஷ்பா’, இந்தாண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கன்னடத்தில் வெளியான ‘கே.ஜி.எஃப். 2’, ‘கார்த்திகேயா 2’ படங்கள் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றன.

சொல்லப்போனால், பாலிவுட்டில்தான் இந்தப் படங்கள் எல்லாம் வசூல் வேட்டை நடத்தின. இதனால் பாலிவுட்டின் வசூல் நிலைகுலைந்தே காணப்பட்டது. மேலும் அங்கு நிலவும் பாய்காட் பாலிவுட், சுஷாந்த் தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் கூட தோல்வியை சந்தித்துள்ளன.

image

எனினும், ‘கங்குபாய் கத்தியவாடி’, ‘டார்லிங்ஸ்’ உள்ளிட்ட படங்கள் ஓரளவு வசூல் செய்தன. அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படமே படுதோல்வியை சந்தித்த நிலையில், பாலிவுட் எப்போது மீட்கப்படும் என்றளவிலான பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்தபோது ‘பிரம்மாஸ்திரா’ படம் குறிப்பிடத்தக்க வசூலை ஈட்டியதால், திரையுலகினர் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் கன்னடப் படமான ‘காந்தாரா’ படத்தால் பாலிவுட் படங்கள் வெற்றிப்பெறுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. நிலம் மீதான அதிகாரம், சாதிய ஒடுக்குமுறை இவற்றுடன் அந்த இடத்துக்கான கலைகள், நாட்டார் தெய்வ வழிபாடு ஆகியவற்றையும் இணைத்து கமர்ஷியலான படமாகக் கொடுத்திருந்தார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. கர்நாடகாவில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்கியதோடு மட்டுமல்லாமல் ரிஷப் ஷெட்டி நடித்துள்ள இந்தப் படம் வசூலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது.

image

16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் இரண்டே வாரங்களில் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கன்னடத்திலே மற்ற மாநிலங்களில் வெளியிடப்பட்டு, வெளியிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுக்கொண்டு இருக்கிறது. அதனால், மற்ற மொழிகளில் இந்தத் திரைப்படத்தை ‘கே.ஜி.எஃப்’ போல் டப் செய்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஏனெனில் ‘கே.ஜி.எஃப்’ படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தான் இதையும் தயாரித்திருந்தது.

அதற்கேற்றாவாறு நேற்று இந்தியிலும், இன்று தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் வருகிற 20-ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே கன்னடத்தில் வரவேற்புப் பெற்று வரும் நிலையில், இந்தியிலும் இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ஒன்றைக் கோடி ரூபாய் வசூலித்து, நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ஐ.எம்.டி.பி.யிலும், இந்திய அளவில் (9.5/10) அதிக ரேட்டிங் பெற்ற முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியில் வெளியான ‘விக்ரம்’, ‘காட்ஃபாதர்’, ‘ராக்கெட்ரி’ படங்களை விட அமோக வரவேற்புப் பெற்றுள்ளது. இதனால் வரும் நாட்களில் பெருமளவிலான வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

அதேநேரத்தில் ஆயுஷ்மான் குரோனா நடிப்பில் வெளியான ‘டாக்டர் ஜி’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் 3.87 கோடி ரூபாய் வசூலித்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் பரீனிதி சோப்ரா நடிப்பில் வெளியான ‘கோட் நேம் திரங்கா’ திரைப்படம் முதல் நாளில் வெறும் 25 லட்ச ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. ‘காந்தாரா’ படத்திற்கு வரவேற்பு கூடி வருவதால், தென்னிந்தியப் படம் மீண்டும் பாலிவுட்டின் வசூலை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் அடுத்த ஒருவாரத்திற்குப் பிறகே வசூல் நிலவரம் முழுவதுமாக தெரியவரும் என்பதால் தென்னிந்தியப் படம், பாலிவுட் படத்தை மீண்டும் ஓவர்டேக் செய்ததா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையில் 15 நாட்களில் ‘காந்தாரா’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்று மாஸ் ஹிட்டடித்துள்ளது. 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்