Published : 10,Oct 2022 06:07 PM

நிலம் மீதான அதிகாரம், துரோகத்தை எதிர்க்கும் மக்கள்! திரைமொழியில் மிரள வைக்கும் ”காந்தாரா”!

Rishab-Shetty-s-Kantara-Kannada-film-review

நிலத்துக்காக நடக்கும் சூழ்ச்சியும், துரோகமும் அதை எதிர்க்கும் மக்களைப் பற்றிய கதை தான், கன்னடத்தில் வெளியாகியிருக்கும் ‘காந்தாரா’ படம். சமீபத்தில் வெளியாகி பலராலும் பாராட்டப்படும் இந்தப் படத்தில் அப்படி என்ன சிறப்பாக உள்ளது?

19-ம் நூற்றாண்டில் குந்தபுராவின் அரசன் தனக்கு நிம்மதி தரும் பஞ்சுலி என்ற தெய்வத்தைக் கண்டுபிடிக்கிறார். அது பழங்குடிகளுக்கு சொந்தமானதாக இருக்க, அவர்களுக்கு நிலங்கள் வழங்கி அதற்குப் பதிலாக தெய்வத்தை எடுத்துக் கொள் என சாமியாடி மூலம் சொல்கிறது பஞ்சுலி. எந்த காலத்திலும் கொடுத்த வாக்கை மீறினால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கையும் செய்கிறது பஞ்சுலி. ஆனால், அந்த நிலத்தை திரும்பப் பெற அரசனின் அடுத்த தலைமுறையினர் முயல்கின்றனர். அதனால் சில அசம்பாவிதம் நிகழ்கிறது. ஆனாலும் நிலத்தைப் பிடுங்கும் முயற்சி மட்டும் நிற்கவில்லை. படத்தின் கதை நிகழ்காலத்தை நோக்கி நகரும் போது பழங்குடியின் தரப்பில் சிவா (ரிஷப் ஷெட்டி), அரசனின் தரப்பில் தேவேந்திரா (அச்சுத குமார்) நிற்கிறார்கள்.

image

இன்னொருபுறம் அரசாங்கத்தில் இருந்து வனத்துறை அதிகாரி முரளி (கிஷோர்), காட்டை ரிசர்வ் ஃபாரஸ்ட்டாக மாற்ற, அந்த நிலத்தில் வாழும் மக்களை அப்புறப்படுத்தும் எண்ணத்துடன் வருகிறார். நிலத்தின் மீது இம்முறை கைகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நீள்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

நிலம் மீதான அதிகாரம், சாதிய ஒடுக்குமுறை இவற்றுடன் அந்த இடத்துக்கான கலைகள், நாட்டார் தெய்வ வழிபாடு ஆகியவற்றையும் இணைத்து கமர்ஷியலான படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. முடிந்தவரை அந்த மக்களின் வாழ்வை மிக நெருக்கமாக சென்றுப் பதிவு செய்த விதமும் படத்தோடு நம்மை பிணைக்கிறது.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான கதாபாத்திர தேர்வும் அவர்களது நடிப்பும் மிக சிறப்பாக இருந்தது. சிவா கதாபாத்திரத்தில் வரும் ரிஷப் ஷெட்டி, ஊதாரித்தனமாக சுற்றும் இளைஞனாக, போலீஸூடன் மோதும் கோபக்காரனாக, இறுதியில் காட்டும் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என அசத்தியிருக்கிறார். படத்தின் இயக்குநரும் அவர்தான் என்பதால் கூடுதலாக படத்தில் கவனிக்க வைக்கிறார். வன அதிகாரி கதாபாத்திரத்தில் கிஷோர் மிக இயல்பான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அச்சுதக் குமாருக்கு கொஞ்சம் க்ரே ஷேட் உள்ள கதாபாத்திரம். அதை மிகத் தெளிவாக நடிப்பில் கடத்தியிருக்கிறார்.

image

படத்தில் பெரிய பலம் படத்தின் ரைட்டிங். ஒரு சீரியசான கதை என்றாலும் படம் நெடுக சில கதாபாத்திரங்கள் மூலம் நகைச்சுவையையும் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். படத்தின் ஆதாரப் புள்ளியாக சிவாவின் தந்தை பற்றி சொல்லப்படும் கதையை, அதில் உள்ள மர்மத்தையும், பயத்தையும் திரையிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தில் வரும் பூதக் கொலா விழாவும், க்ளைமாக்ஸில் சிவாவின் நடிப்பும் கூஸ்பம்ப்ஸ் தரக்கூடியது. அதற்கு மிகவும் உதவி இருப்பது அரவிந்த் காஷ்யப்பின் ஒளிப்பதிவும், அஜனீஷ் இசையும். விக்ரம் மோர் அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகளும் மிக நேர்த்தியாக இருந்தது.

படத்தில் சில குறைகளும் உள்ளது. ஹீரோயின் மற்றும் ஹீரோவின் அம்மா கதாபாத்திரங்களுக்குப் பெரிய வேலை எதுவும் இல்லை. அவர்கள் இல்லாவிட்டாலும் கூட படத்தில் எதுவும் மாறப்போவது இல்லை. அச்சுதக்குமாரை மிக நல்லவராகக் காட்டும் போதே அவரின் கதாபாத்திர திருப்பம் பற்றி எளிமையாக கணிக்க முடிகிறது. படத்தின் முதல் பத்து நிமிடம், கடைசி பதினைந்து நிமிடமும் நமக்கு அளிக்கும் பிரம்மிப்பை, இடைப்பட்ட பகுதி பெரிதாக அளிக்கவில்லை.

இப்படியான குறைகள் இருந்தாலும், ஒரு கமர்ஷியல் ஃபார்மெட் சினிமாவுக்குள் நம்மை பிரம்மிக்க வைக்கும்படியான திரை அனுபவத்தை வழங்குகிறது ‘காந்தாரா’.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்