அழிவின் விளிம்பில் உப்பு கேக் தயாரிப்பு.. இழுத்து பிடித்திருக்கும் மணிப்பூர் கிராமத்தினர்!

அழிவின் விளிம்பில் உப்பு கேக் தயாரிப்பு.. இழுத்து பிடித்திருக்கும் மணிப்பூர் கிராமத்தினர்!
அழிவின் விளிம்பில் உப்பு கேக் தயாரிப்பு.. இழுத்து பிடித்திருக்கும் மணிப்பூர் கிராமத்தினர்!

பழமையான தொழில்கள் பலவும் காலப்போக்கில் அழிந்துக்கொண்டு வருவதால் அந்த பழமை வாய்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் பலரும் பாரம்பரியத்தை பின்பற்ற முடியாமலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள்.

அந்த வகையில் மணிப்பூர் மாநிலத்தின் பழமையான தொழிலாளக இருந்து வந்தது உப்பு தொழில் ஒன்று. மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த உப்பு தொழில் பரிணாமவளர்ச்சி அடைய அடைய தற்போது அதுவும் அழிவு நிலையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. தற்போதைய கணக்குப்படி மணிப்பூரில் வெறும் 10 குடும்பத்தினரே இந்த உப்பு தொழிலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோக உப்பு நீர் எடுக்கப்படும் கிணறுகளின் எண்ணிக்கையும் மூன்றாக குறைந்திருக்கிறது. அதுவும் இந்த நிங்கல் கிராமத்தில்தான் உப்பு கேக்குகள் செய்யப்படும் பகுதியாக இருந்து வந்தது. மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் சந்திரகோங், சீகோங், வைகோங் போன்ற புகழ்பெற்ற கிணறுகள் இருந்தனவாம்.

இந்த பாரம்பரியமான உப்பு கேக்குகளின் பயன்பாடு இப்போது முக்கியமாக பிறப்பு, திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டும் விநியோகிக்கும் அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாம். இந்த உப்பு கேக்குகளுக்கான பயன்பாடு முற்றிலும் குறைந்திருப்பதால் தெளபல் மாவட்டத்தில் உள்ள நிங்கல் கிராமத்தின் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் போன்ற வேறு தொழில்களை நோக்கிச் செல்கின்றனர்.

சால்ட் கேக் தயாரிப்பில் லாபமும் தற்போது பெரிதாக இல்லை என்றும், ஒரு ஸ்லாப் உப்பு கேக்குகள் 10 முதல் 15 ரூபாய் வரையே விற்கப்படுகிறது என உப்பு தயாரிக்கும் பினாசாகி என்பவர் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “காலப்போக்கில் இந்த வேலை வழக்கற்று போனால் நாங்கள் எந்த வேலையும் இல்லாமலேயெ இருப்போம். இதுபோக பண்டைய பாரம்பரிய கலையை முற்றிலும் இழக்க நேரிடும்.” எனக் கூறியுள்ளார்.

மற்றொரு உப்பு தயாரிப்பாளரான லதா என்பவர், “பண்டைய காலத்தில் ‘தம்’ என அழைக்கப்பட்ட இந்த உப்பு தொழில் மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. உப்பு நீரை காய்ச்சுவதற்கும், அதற்காக விறகு வாங்குவதற்குமே பெரிதும் சிரமத்தை சந்திக்கிறோம். லாபமோ குறைவாகி விட்டது. இருப்பினும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே தற்போது இந்த பாரம்பரிய தயாரிப்பு முறையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

போர்க்களத்தில் சிறப்பாக செயல்படுபவர்களை பாராட்டும் விதமாக இந்த பாரம்பரியமான உப்புக் கேக்கைதான் ஒரு காலத்தில் மணிப்பூர் மன்னர்கள் பரிசாக அளித்தார்களாம். இப்படியான சிறப்புமிக்க தொழிலாக இருந்து வந்த இந்த உப்பு கேக் தயாரிப்பை மீண்டும் நிலைநிறுத்த அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com